புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார்.
இன்று (06) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தின்பால் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களை கூட்டி இரண்டு மூன்று தினங்களாக விவாதித்து வருகின்றோம். இதில் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். பாராளுமன்றம் கூடியதும் தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இவ் விடயம் தொடர்பில் ஆராயலாம் என எண்ணுகின்றோம். கஜேந்நிரகுமார் பென்னம்பலத்துடனும் பேச இருக்கின்றோம்.
ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுடைய குரலாக 21 வது திருத்த சட்டத்தில் எமது மக்களின் கோரக்கைகளை எவ்வாறு உள்ளடக்குவது என்பதுடன் இத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது இதில் காணப்படுகின்றது.
தற்போது மக்களுடைய கோரிக்கை ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த விடயத்தில் 19வது திருத்தச்சட்டத்தை கூடுதலாக பார்க்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.
21 வது திருத்தச்சட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த குரலாக செயற்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. அந்த ஒட்டுமொத்த குரலுக்குள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைகள், எங்களுடைய தேசத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து ஒரே குரலாக தெரிவிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக இணைந்து எங்களுடைய பிரச்சனைகளை உள்ளடக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புகின்றேன்.
21வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் வருவதற்கு முன்னராக அமைச்சரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவதாத்திற்கு வருவதற்கு முன்னர் எங்களுடைய ஒருமித்த கருத்தினை சொல்கின்ற வாய்ப்பபை உருவாக்க வேண்டும்.
“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆகியவுடன் புலம்பெயர் தமிழர்களுடைய உதவியை கோரி இருந்தார். தற்போது சில புலம்பெயர் அமைப்புக்களும் நிபந்தனையுடன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,
இன்றைய சூழலிலே புலம்பெயர் உறவுகளிடம் பணம் கோருவது என்பது சந்தர்ப்பத்திற்காக அவர்களினை பயன்படுத்துவது போன்று தெரிகின்றது.
மேலும் இலங்கை அரசினால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்களுடைய அமைப்புக்கள் மீது ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது இலங்கை அரசினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்குவதுடன் அதற்குரிய நிதியதிகாரத்தினை குறிப்பாக மாகாண முதலமைச்சர் நிதியினை கையாளக்கூடிய வசதியினை பிரதமர் செய்வதன் மூலமாக இந்நாட்டினுடைய பிரச்சனையை தீர்க்க முடியும்.
ஆகவே பிரதமர் இவ்விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயங்களில் கவனம் செலுத்தாத வரை புலம்பெயர்ந்த உறவுகள் முதலீடுகளை செய்வதற்கு நிச்சயமாக வரமாட்டார்கள்.
அத்துடன் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் புலம்பெயர் உறவுகள் தங்களுடைய முதலீடுகளை செய்த பின்னர் அரசாங்கம் திட்டமிட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய முதலீடுகளை முடக்குகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை நங்கள் காணலாம்.
ஆகவே மாகாண சபைகள் நிதியினை கையாள்வதற்கான வாய்ப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குதல் தொடர்பான விடயங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக எங்களுடைய மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாணசபைகளும் இவ்விடயங்களை நேர்த்தியான முறையிலே கையாண்டு மக்களுடைய பஞ்சம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் இருந்து மீள் எழுவதற்கான வாய்ப்பினை முன்னெடுக்க முடியும்.
தற்போது பரவலாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விடுதலைப்புலிகளின் அதிகாரங்களை மிகவும் சமாளிக்க முடியாது என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். எவ்வாறு உயிர்த்த ஞாயிறு படுகொலை செய்யப்பட்டதை போன்று விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்ற ரீதியிலே இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களை இணைத்துக்கொண்டு காலி முகத்திடலிலே இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டத்தினை கலைக்கின்ற நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தை தீட்டுகின்றதா என்ற சந்தேகம் எங்களிற்கு உருவாகின்றது.
அந்த வகையிலே துப்பாக்கி சூடு செய்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்பதுடன் அவர்கள் எங்கு போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தினை அரசாங்கம் செய்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழர்களின் கையிலே பிரச்சனையை திணித்து தமிழர்கள்தான் இதற்கு காரணம் என்ற சந்தர்ப்பத்தை செய்யக்கூடியவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறவர்கள். ஆகவே அவர்கள் இவ்விடயங்களை மிக சாதுர்யமாக கையாளக்கூடும் என தெரிவித்தார்.