நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக யூரியா உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த நன்றியினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கு இன்று உணவு கிடைக்குமா என்றே ஒவ்வொரு நாழும் ஒவ்வொரு குழும்பஸ்தாரும் சிந்திக்கின்ற நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தவறான தீர்மானங்களால் உருவாகியிருக்கின்ற இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.
தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமுடியாது. தனக்கு 5 வருடங்களுக்கு ஆணையை மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி கோட்டபாய தெரிவிக்கிறார். கால வரையறையை அவர் எந்தவகையில் நிர்ணயிக்கிறார் என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தவரை வேண்டாமென்று சொல்லும் மக்களிடம் அவர் கூறும் பதில் இதுதானா.
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வெளியேறுமாறு இளைஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இப்படியான ஒரு கருத்தை ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடிகிறது.
நாட்டில் நடைபெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குள் நாடு இருக்கையில், உலகளவில் ஏற்பட்ட கொவிட் தொற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரீட்சையாகும். அந்தப் பரீட்சையில் அவர் தோல்;வியடைந்தார். ஆதனால் விலை அதிகரிப்பும் கட்டுப்பாட்டு விலை அகற்றலும் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு.
இந்த விலை அதிகரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது அடிப்படை வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் சிரமப்படும் அடிமட்ட மக்களாகும்.
விவசாயம் நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையாகும். அது இன்று அதள பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டது. அதற்குக் காரணம் ஜனாதிபதி தனக்கு கிடைத்த 69 லட்சம் மக்களின் வாக்கு காரணமாக ஏற்பட்ட இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையாகும். ஒரு கொள்கைளை நடைமுறைப்படுத்த முனையும் போது அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற சூழல் அறிந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் அல்லல்படுவது நாட்டு மக்களே.
கடந்த வருடத்தில் உரம் இன்மையால் நாட்டில் அரிசி விலை அதிகரித்துவிட்டது. அது தவிரவும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது தொடங்கியிருக்கின்ற வேளாண்மைச் செய்கையாயினும் விளைச்சலைத்தரவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திக்க வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்கின்றனர்.
காரணம் இம்முறையேனும் நேர காலத்துக்கு இரசாயன உரம் கிடைக்குமா என்பதிலேயே மக்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் விவசாய அமைச்சர் இந்திய உதவித்திட்டத்திலே 65ஆயிரம் மெக்றிக் தொன் உரம் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக யூரியா உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
உரத்தினை மானிய அடிப்படையில் நீங்கள் வழங்காவிட்டாலும், சாதாரண விலையிலாவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 40- 45 ஆயிரம் ரூபாவுக்கு ஒரு அந்தர் யூரியாவை எடுத்து சிறு விவசாயிகள், வேளாண்மை செய்வோர், மரக்கறி செய்வோர் , மலையகத் தொழிலாளர்கள் எப்படி அவர்களது விவசாயத்தை முன்னெடுப்பது.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்கின்றோம். உள்ளுர் உற்பத்தியை விளைவிக்கக் கூடிய அளவிற்கு இரசாயன உரம் இன்றி எப்படி அந்த விளைச்சல் உருவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாங்கள் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், வரிசையில் நின்று கொண்டிருக்கின்றோம். ஓரளவுக்கு எரிபொருளும், எரிவுயுவும் கிடைக்கின்றது. ஆனாலும் வரிசைகள் மாத்திரம் குறையவில்லை. பெற்றோலுக்கும் டீசலுக்கும் மக்கள் பெரும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள். ளரிவாயு மேல்மாகாணத்தில் கொடுக்கப்படுகின்றது. மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மண்ணெ;ணணை கூட தட்டுப்பாடாக இருக்கின்றது. இன்று மண்ணெண்ணை இல்லாமல் சிறு விவசாயிகள் மரக்கறித் தோட்டம் செய்பவர்கள் தங்களது நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்க முடியாமல் இருக்கின்றார்கள். கடலுக்குச் செல்பவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றார்கள்.
இன்று நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் இருக்கின்ற நிலையில் கட்டுப்பாடற்ற விலைகள் நாட்டில் இருக்கின்ற பொது சிறு வியாபாரிகள் கூடு நினைத்தபடி பொருள்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அரசாங்க உத்தியோகத்தர்களால், மாதாந்த வருமானம் பெறுபவர்களால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள். இவ்வாறான நேரத்தில் கமம் செய்பவர்கள்,
கடலுக்குச் செல்பவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் தங்களது தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கின்றார்கள். எனவே பெற்றோலிய அமைச்சர் அமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களுக்கு மண்ணெண்ணையையாவது கொடுக்க வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோளாக இருக்கின்றது. எரிவாயுவைப் பெறமுடியாவிட்டால் மண்ணெண்ணையிலாவது தங்களது அடுப்புக்கள் எரியவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுப்பாடற்ற விலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளிகள் முதல் சிறுவியாபாரிகள் வரை தாங்கள் நினைத்தபடி விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள் இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.