மன்னார் காற்றாலை விவகாரம்: குற்றச்சாட்டை மறுத்த ஜனாதிபதி – மன்னிப்புக் கோரிய மின்சார சபைத் தலைவர்!

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கோப் குழுவில் ஆஜராகியிருந்த மின்சார சபைத் தலைவர், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டீரந்தார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.