ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றின் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவது குறித்து தகவல்கள் உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த, தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவரும் பின்னர் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமையாற்றியவருமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான முரளி எனும் சுமதிபால திருக்குமார் எனும் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளருக்கும் அவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நியாயமான சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரணை ஒன்று அவசியம் என வழக்கை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்கள குழுவுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிபதிகளுக்கு அறிவித்தார்.
அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றூடாக, நிலைப்பாட்டை மாற்றி சாட்சியம் அளிக்க அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்பது குறித்து மிக விரைவான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அடுத்த தவணைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமாரவுக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வாளர்களின் பிணையும் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடும் எச்சரிக்கையுடன் மீண்டும் முன்பிருந்த நிபந்தனைகலின் கீழ் பிணையில் செல்ல கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு அவர்களுக்கு அனுமதியளித்தது. மீண்டும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தெரியவந்தால் பிணை வழக்கு முடியும் வரை ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தின் பிரதிவாதிகளான கிரித்தலை இராணுவ புலனாய் முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் கேர்ணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, ஸ்டாப் சார்ஜன் வடுகெதர வினிபிரியந்த டிலஞ்சன் உபசேனா எனபப்டும் சுரேஷ், ஸ்டாப் சார்ஜன் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ எனும் நாதன், ஸ்டாப் சார்ஜன் செனவிரத்ன முதியன்சலாகே ரவீந்ர ரூபசேன எனபப்டும் ரஞ்சி, சமிந்த குமார அபேரத்ன, எஸ்.எம். கனிஷ்க குமார அபேரத்ன, ஐய்யா சாமி பாலசுப்ரமணியம், கி.ஜி. தரங்க பிரசாத் கமகே, எரந்த பீரிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால் விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தர்வு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் நேற்று முன்தினம் மன்றில் சாட்சியமளித்த, அரச தரப்பின் 4 ஆவது சாட்சியாளரான முரளி எனும் சுமதிபால திருக்குமார், முன்னதாக சி.ஐ.டி. க்கு அளித்த வாக்கு மூலம் மற்றும் ஹோமாகம நீதிவானுக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் அளித்த இரகசிய வாக்கு மூலத்துக்கு மாற்றமான நிலைப்பாட்டை சாட்சியாக வழங்கிய நிலையில், அவரை அரச தரப்புக்கு எதிரான சாட்சியாளராக சட்ட மா அதிபர் தரப்பு பெயரிட்டது.
அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கைஎடுக்க எதிர்ப்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் இந்த விவகாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் உள்ளடங்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார். ஏற்கனவே 3 ஆம் சாட்சியாளரான ரண்பண்டா என்பவர் தொடர்பிலும் அதே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந் நிலையிலேயே, 4 ஆம் சாட்சியாளரின் மேலதிக சாட்சி நெறிப்படுத்தல்கள் மற்றும் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 154 ஆவது அத்தியாயத்துக்கு அமைவான குறுக்கு விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என மன்றில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
எனினும் குறித்த சாட்சியாளரான சுமதிபால திருக்குமார் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க, அவ்வாறு அவரை விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என வாதிட்டார்.
எனினும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா ஆகியோர் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சாட்சியாளரான சுமதிபால திருக்குமாரை அடுத்த தவணை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
வழக்கில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன, அனுர மெத்தேகொட உள்ளிட்டோர் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.
2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாக சிறைவைக்கும் நோக்கத்தில் கடத்திச் சென்றமை, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.