பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றுள்ள தமிழர்களை அகதிகளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி அடைத்து வைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை – குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் வாழ்வியல் மரபு என தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட தமிழக அரசு உறுதியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகள் முகாம் என்ற பெயரை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றம் செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.