இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வேண்டுமென இலங்கை போக்குவத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது. பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.

நாம் எரிபொருளை கடமை நேரத்தில் வரிசையில் நின்று பெறமுடியும்.

ஆனால் நாம் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை லீவை யாரும் தரப்போவதில்லை. நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெற்றோல் நிரப்ப செல்ல முடியாதே! எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என்றனர்.