த. தே. கூ. ற்குள் பிளவுகளை ஏற்படுத்த வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் சிலர் செயற்படுகின்றார்கள் – ஜனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்தே செயற்படுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். கூட்டமைப்புக்கு உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கடந்த 1983ம் ஆண்டு வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் பல கட்டங்களாக இடம்பெற்றாலும், 1983ம் ஆண்டு ஜுலையில் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழின சுத்திகரிப்பாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. கறுப்பு ஜுலை என்று உலகறிந்த இந்த நாட்கள் ஜுலை 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுவது ஒரு பிழையான விடயம் என்பதை தற்போதைய சந்ததியினர் அறிய வேண்டும்.

ஏனெனில் 1983ம் ஆண்டு ஜுலை 23ம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே தமிழீழ விடுதலைப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அவர்களது சடலங்கள் கொழும்பைச் சென்றடைந்ததும் தான் அடுத்த நாள் தொடக்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இன அழிப்பு தொடங்கியது. ஜுலை மாதம் 25 மற்றும் 27ம் திகதிகளில் தமிழ் அரசியற் கைதிகள் வெலிகடை வென்சிறைக்குள்ளே இலங்கை பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் காடையர்கள் ஏவப்பட்டு 25ம் திகதி தமிழீழப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கிய தங்கதுரை, குட்டிமணி, தேவன், ஜெகன் நடேசன் மாஸ்டர் உள்ளிட்ட 36 பேரும், 27ம் திகதி 17 பேரும் உட்பட 53 பேர் வெலிகடைச் சிறையுள்ளே மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தத் தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது குட்டிமணி அவர்கள் ‘என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் மலரும் தமிழீழத்தைத் தடுத்து விட முடியாது. என்னைத் தூக்கிலிட்ட பின்னர் என் கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்குக் கொடுத்து விடங்கள் அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் காண்பேன்’ என்று கூறியதற்காக அவரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் போட்டு மிதிக்கப்பட்ட அநாகரிகமான வரலாறுகளும் அரங்கேற்றப்பட்டது.

வருடத்தில் மே மாதமும், ஜுலை மாதமும் தமிழர்களுக்கு மறக்க முடியாத மாதங்களாக இருக்கின்றது. இவ்விரு மாதங்களிலும் தமிழர்களுக்கு கொடுமைகளை அள்ளி இரைத்த சிங்களத் தலைவர்களுக்கும் தற்போது அவ்விரு மாதங்களும் ஒரு மறக்க முடியாத மாதங்களாகவே மாறியிருக்கின்றது.

கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து இன்று இந்த நாட்டு மக்களினாலேயே விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டிலுமே தங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்து இன்று அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டிருக்கின்றர். மே மாதம் முள்ளிவாய்க்காலிலே ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து மேற்பட்ட தமிழ் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் கோட்ட கோ கோம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்ற மே மாதத்தில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோன்று தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஜுலைக் கலவரம் இடம்பெற்ற இந்த ஜுலை மாதத்தில் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டை விட்டு தப்பியோடும் நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த நிலைமைகளில் இரந்து தமிழர்களின் போராட்டம் எத்தனை நியாயமானது என்பதையும், நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காகத் தான் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடினார்கள் என்பதையும் தற்போதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

இன்று தேசியப் பட்டியல் மூலமாக, தனது கட்சியில் இருந்து ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் வந்தவர், அதுவும் பாராளுமன்றம் கூடி ஒரு வருட காலத்தின் பின்னர் பதவிப் பிரமானம் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும், பதில் ஜனாதிபதியாவும், தற்போது பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியாகவும் இருக்கின்றார். அவர் சர்வகட்சி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருப்பதோடு, ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

கடந்த 2015 தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அவரது தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கியிருந்தது. இன்று பாராளுமன்றத்திலே நடைபெற்ற புதிய ஜனாதிபதி தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதானதொரு முடிவினை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்திருக்கின்றது. இருந்தும் இது தொடர்பில் சில புனைக்கதைகள் தற்போது வெளிவருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். எத்தனையோ பாரிய பிரச்சனைகளின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாகவே பயணித்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற தமிழத் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் ஒன்றாகவே முடிவெடுப்பார்கள், ஒன்றாகவேதான் வாக்களிப்பார்கள். தற்போதை ஜனாதிபதி தெரிவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்தே வாக்களித்திருப்பார்கள்.

முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவது வழமை இருப்பினும், முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றார்கள்.

தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டின் பொருளாதார நிலைமை சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை, உரிமைப் பிரச்சனை இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலையான வேண்டுகோள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நாட்டிலே பொருளாதார ஸ்திரத்தன்மை ஒன்று பேணப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களதும் அபிலாசையாக இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சர்வ கட்சி அரசாங்கததிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்காது, ஏற்கவும் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள். சர்வகட்சி ஆட்சியொன்று அமைய வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலாக எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு அந்த சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலமாக ஏற்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் அவா.

இதற்கு நெடிய வரலாற்றுக் காரணம் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார்ந்து எட்டப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களும், தீர்வுகளும் அப்போதைய எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து கிழித்தெறியப்பட்டதும், எரிக்கப்படடதுமே வரலாறாக இருக்கின்றன. இதிலிருந்து நாங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் எந்தவித எதிர்ப்புமே தெற்கு அரசியற் கட்சிகளில் இருக்கக் கூடாது. ஒரு கட்சி தீர்வினைக் கொடுக்க முன்வருகின்ற போது மற்றைய எதிர்க்கட்சி எதிர்க்கின்ற வரலாறு இருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் இரண்டரை மூன்று வருடங்கள் இந்தப் பாராளுமன்றம் நிலைத்திருக்குமாக இருந்தால், அதில் சர்வ கட்சி அரசாங்கம் அமையுமாக இருந்தால் அந்த அரசாங்கத்தினால் பொருளாதார மீட்சிக்கு மேலாக இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு எட்டப்படுமாக இருந்தால் ஒரு எதிர்ப்பு இல்லாமல் அந்தத் திர்வு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.

எனவே சர்வ கட்சி அரசாங்ககம் உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் 22ம் திருத்தச் சட்டத்திற்குள்ளே இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் கடந்த காலங்களிலே போராட்டங்களில் இறந்த ஆத்மாக்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டவர்கள், சிறைச்சாலைகளுக்குள்ளே படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு வர வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையிலே இருந்த காலகட்டத்திலே தமிழ் மக்களுக்கான அரசியற் குரலாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மூன்ற கட்சிகளின் கூட்டாக இருக்கின்றது. தற்போது இந்த மூன்று கட்சிகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலை இருக்கக் கூடாது. தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமித் தேசியக் கூட்மைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களும் மீண்டும் வர வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான ஒரு அரசியற் குரலாக, அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு எமக்காக உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களுக்காகவும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.