அகிலம் போற்றும் நல்லூர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்: கொடிச் சீலை பிரதம குருக்களிடம் கையளிப்பு

அகிலம் போற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் பாரம்பரிய நிகழ்வு இன்று திங்கட்கிழமை(01.8.2022) காலை-9 மணிக்குப் பக்திபூர்வமாக
நடைபெற்றது.

ஆலய மரபிற்கு அமைய நல்லூர் கிழக்கு சட்டநாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை ஆராதனைகளைத் தொடர்ந்து கொடிச் சீலை தயாரிக்கும் மரபினை உடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(02.8.2022) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெற உள்ளது.

இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-11 ஆம் திகதி மாலை-4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-4.45 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-4.45 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-6.45 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6.45 மணிக்கு தெண்டாயுதபாணி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை-4.45 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-6.15 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-6.15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5 மணிக்கு கொடியிறக்க உற்சவமும், மறுநாள் சனிக்கிழமை மாலை-4.45 மணிக்குப் பூங்காவன உற்சவமும் இடம்பெறும்.