இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்நிலையில் இந்தச் செயற்பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதுடன் இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30.8.2022) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் பல்வேறு அநீதிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக் கூட்டத் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பில் நாங்கள் பல்வேறு சிவில், பொது அமைப்புக்களுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறோம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கான சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையிலான முழுமையான ஊடக அறிக்கையை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெயராம் றாபின் முழுமையாக வாசித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.