நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் அந்நிறுவனம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஊழலற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.