இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட குழு நியமிப்பு

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தற்போது சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3,800 பேர் மாத்திரமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.