இலங்கையின் கடன்கள் ஸ்திரமான நிலையில் இல்லை – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்

இலங்கையின் கடன் நிலைவரம் ஸ்திரமான தன்மையில் இல்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் நிதியியல் இடைவெளி இல்லாமல் போயிருப்பதாகவும் சுமார் 25 சதவீதமான சந்தைகளின் கடன் நிலைவரம் ஸ்திரமான நிலையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கை குறித்து சிந்தித்துப் பார்ப்பதுடன் பெரும்பாலான நாடுகள் அதனையொத்த நிலையிலேயே இருக்கின்றது. கானா போன்று மிகவும் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற நாடுகள்கூட ஏனைய வெளியகத்தாக்கங்களால் சந்தைகளை நாடுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

அதேவேளை வறிய நாடுகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை கடன்களை மீளச்செலுத்தமுடியாத அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வாரம் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் இது இலங்கை முன்நோக்கிப் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர் மேற்குறிப்பிட்டவாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.