சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஜக்கியநாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லீம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13.9.2022) மாலை-4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தில் வைத்து
மக்கள் பணிமனைத் தவிசாளரும், வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான சுபியான் மெளலவி மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இணைந்து மகஜரினை ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி திருமதி.காயத்திரி குமரனிடம் நேரடியாகக் கையளித்தனர்.
இதேவேளை, மகஜரினைப் பெற்றுக் கொண்ட ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி ஐக்கியநாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் மூலம் குறித்த மகஜரினை உடனடியாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.