கசூரினா கடற்கரையின் சுற்றுலா மையத்தில் 4 பரப்பு விஸ்தீரணத்தில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்குக் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதற்காக கடற்படையினர் கோரிய பணம் இன்று பிரதேச சபையால் காசோலை மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கசூரினா கடற்கரை சுற்றுலா மையத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் சுற்றுலாவிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அங்கிருந்து கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்று பிரதேச சபை கோரிக்கை விடுத்திருந்தது.
நேற்று பிரதேச சபை மாதாந்த அமர்வு கசூரினா பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், காரைநகர் கடற்கரைப் பொறுப்பதிகாரிகள் இருவர் கலந்து கொண்டனர்.
கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தக் கட்டடத்துக்கான பெறுமதியைச் செலுத்துவதுடன், பிறிதொரு காணியையும் வழங்கினால் அந்தப் பகுதியில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளவோம் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கடற்படையினர் அமைத்துள்ள நிரந்தரக் கட்டடத்தின் பெறுமதி 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபா என்று விலை மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டிருந்தது.
பணத்தையும், சுற்றுலா மையத்துக்கு வெளியே காணியொன்றை வழங்கவும் பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து நேற்று முதல் அந்த இடத்தில் இருந்து கடற்படை முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கடற்படைப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்படைக்கு வழங்கும் பணத்தை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கத்தில் மீதமாக உள்ள தொகையில் இருந்து பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு, இன்று அதற்கான காசோலை கடற்படையினருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.