பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மாறிவரும் அரசியல் காரணங்களால் பொருளாதாரத்தில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்திய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்தும் கவனம் செலுத்த ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

பொருளாதார நெருக்கடியின் ஊடாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டதன் காரணமாகவே இந்த விசாரணை நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் மனித உரிமைகள் பேரவை அமர்வில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் கடந்த கால மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.