தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ​​பொலிஸாருக்கு எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டத் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸார் வழங்க வேண்டுமென தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவல்களை உரிய காலத்துக்குள் ​பொலிஸார் வழங்கவில்லை என்றால், இலங்கை பொலிஸ் திணைக்களம், அத்திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி சுரேன் டி பெரேரா செய்திருந்த மேன்முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே ஆணைக்குழு மேற்கண்டவாறு ​உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

2019 – 2021ஆம் ஆண்டுவரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, பால்நிலை உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும் என சட்டத்தரணி சுரேன் டி பெரேரா பொலிஸ் திணைக்களத்திடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், சுரேன் டி பெரேரா கோரும் தகவல்களால் தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறி  பொலிஸ்மா அதிபர் அத்தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். ​அது தொடர்பில் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சுரேன் டி பெரேரா ​கோரியுள்ள தகவல்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதில்லை என தெரிவித்துள்ள ஆணைக்குழு, 28ஆம் திகதிக்கு முன்னர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் எனவும் பொலிஸ் திணைக்களத்துக்கு எச்சரித்துள்ளது.