அண்மையில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.
இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.
எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.
எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இது பிரிட்டன் அரசியலின் மிகப் பெரிய குழப்பமாகப் பார்க்கப்படுகிறது.
லிஸ் டிரஸ்சுக்கு அடுத்தது ஒரு பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரிட்டன் பிரதமராக அவர் இருப்பார்.
கன்சர்வேட்டிவ் கட்சியால் அடுத்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய இயலுமா? அதன் மூலம் அந்தக் கட்சியால் நாடு பொதுத் தேர்தலை சந்திக்காமல் தடுக்க முடியுமா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது.
இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.