சீனாவால் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து இனியாவது அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கில் சீனாவை அனுமதித்துள்ளமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சுரேஷ் பிரேமசந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து -பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சீனாவின் வல்லாதிக்க போட்டிக்கு இலங்கையை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் எனவும் அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள், ஊடுருவல்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது தொடர்பாகவும் பலமுறை சுட்டிக்காட்டியிருந்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கு அகலமாகக் கதவுகளைத் திறந்து விட்டுவிட்டு இந்தியா எனது சகோதரன் என்றும் சீனா எனது நண்பன் என்றும் இலங்கை கூறுவது நகைப்புக்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திற்குள் சீனாவின் சகலவிதமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு கட்டுப்படுத்தத் தவறினால் அது பெரும் பின்விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.