நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு துரித தீர்வினை வழங்குவதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் துரித கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய பிரத்தியேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (26) இடம்பெற்ற போது , நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து தட்டுப்பாட்டுக்கு துரித தீர்வினை எட்டுமாறு சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை தடையின்றி மக்களுக்கு விநியோகிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதற்கமைய விநியோக முகாமைத்துவம் தொடர்பில் தட்டுப்பாடின்றி மருந்துகளை விநியோகிப்பதற்காக பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளிடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் , பிரதமரின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்களாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மருந்து கொள்வனவிற்காக கிடைக்கப் பெற்றுள்ள உதவிகளில் பெருமளவானவை கடனுதவிகளாகும்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்ச்சியாக மீள செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடன்களை மீள செலுத்துவதால் உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற உதவிகளில் சில வீதி புனரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.