பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் நிதியமைச்சு, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்திருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும்.
அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.
அதன்போது காண்பிக்கப்பட்ட சுருக்க விளக்கப்படம், கடன்வழங்குனர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்பன நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொரியா, ஜேர்மனி, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுவதுடன் மொத்தக்கடன்களில் அவை முறையே (சதவீதங்களில்) 52.0, 19.5, 12.0, 2.9, 2.4, 2.2, 1.4, 1.4, 1.0, 0.9 சதவீதமான கடன்களை வழங்கியிருக்கின்றன.
இக்கணிப்பீட்டின்படி இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு மொத்தமாக 14.1 பில்லியன் டொலர்களை இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடன்கள் ஸ்திரமற்றநிலையில் காணப்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்காது என்று வெளியகக்கடன்வழங்குனர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை, எனவே ‘பொதுகடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இருதரப்புக்கடன்வழங்குனர்கள் ஆதரவளிப்பர்’ என்ற நம்பிக்கையை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கக்கூடியவாறான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கமுன்வரவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கின்றது.
அதுமாத்திரமன்றி இத்தகைய நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் விளக்கமளித்திருக்கின்றது.
அத்தோடு இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது அனைத்து இருதரப்புக்கடன்வழங்குனர்களுடனும் சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.