நிதி உள்ளிட்ட 4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானம்

4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 44(3) இன் கீழ், பிரதமருடன் கலந்தாலோசித்து, 4 அமைச்சுக்கள் தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானித்துள்ளதாக, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.