நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருக்கும் போது வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது, வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது. மலையக மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைத்து கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் எதிர்பார்த்த வரவு- செலவுத் திட்டம் அமையவில்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலையில் நிவாரணங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இன்றைய பொருளாதார நிலையில் மத்திய பொருளாதார நிலையில் இருப்பவர் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளார். கீழ் மட்டத்தில் இருப்பவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.
அத்துடன் கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேயிலைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இன்று தேயிலை விலை அதிகரித்துள்ளது. உரம் இல்லாததால், உற்பத்தி குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை மூலம் 1.3 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மலைய மக்கள் தொடர்பில் நன்கு அறிந்த ஜனாதிபதி, வரவு- செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களின் நலன் தொடர்பில் எந்த பிரேரணையைும் முன்வைக்கவில்லை. அது குறித்து எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், மலையக மக்கள் இந்திய வம்சாவளியாக தோட்டங்களுக்கு வந்து அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த மக்களின் பிரச்சினை எதற்கும் முழுமையான தீரவு கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. லயனட அறைகளும் தொடர் மலசலகூடங்களுமே இருந்து வருகின்றன. பாடசாலை, வைத்தியசாலை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இ்ப்படியான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எந்த பிரேரணையையும் முன்வைக்கவி்லலை.
அத்துடன் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். வடக்கில் மாத்திரம் அல்ல, கிழக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசவேண்டும். ஆனால் ஜனாதிபதி வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்திருப்பது வடக்கு கிழக்கை பிரிப்பதற்கா அல்லது வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது.
அத்துடன் மலையக மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தரையாட மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடவேண்டும என்றார்.