தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா. அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியின் தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தனர்.

கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

 

 

 

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன.

இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது