யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.