உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.
தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.
வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.
தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.
நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.
அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.
நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.