பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறுத்தி வைப்பதற்கான இடைக்கால உத்தரவை மார்ச் 28 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மேலும் நீடித்தது.
தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் பிரகாரம், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனை கூண்டில் நிற்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில் இருந்து நீதவான் தடுக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன் மீட்கப்பட்ட விவகாரத்தில், தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1) (அ) பிரிவின் விதிகளின்படி செயற்பாட்டாளர் மஹிந்த ஜயசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.