13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே (28-04-23) இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம்,ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகளை சந்தித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக்கூறினார் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.