இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழர்களிற்கான பிரிட்டனின் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆண்டை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய சர்வதேச நாடுகளை பின்பற்றி பிரிட்டன் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு மன்னிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிவழங்கப்படும்,தமிழர்கள் செழிக்ககூடிய எதிர்காலத்திற்காக நாம் உழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிபொருள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நிழல் அமைச்சர் பரிகார்டினர் இலங்கையில் நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்னும் மனித உரிமை பேரவையின் எத்தனை அறிக்கைககள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கில் இராணுவபிரசன்னத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள ஹரி பார்டினர் இலங்கை தனது திறமையையும் ஆளுவதற்கான உரிமையையும் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் கட்சியால் இலங்கை மீது கொடுக்கப்படவேண்டிய அழுத்தங்களை கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நான் உங்கள் போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்பது குறித்து பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்குமேலாகின்ற போதிலும் எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாதது குறித்து ஆசிய பசுபிக்கிற்கான நிழல் அமைச்சர் கதரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
தொழில்கட்சி வலுவான ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தை கொண்டுவரும் என தெரிவித்துள்ள கதரின் வெஸ்ட் இலங்கை அரசாங்கத்தின் யுத்தகுற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக ஒரு தடையை கூட பிரிட்டன் விதிக்காதமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்மெக்டொனாக் இது அமெரிக்காவின் நடவடிக்கைகளிற்கு முரணானது அமெரிக்கா இதுவரை இலங்கையின் பல அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளார்.
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இலங்கையில் பொறுப்புக்கூறல் நீதிக்காக தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.