இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.
தேசிய மின்சார தேவையை ஈடுச்செய்ய கூடிய திட்டங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வந்தது. இந்தியாவுடன் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் மற்றுமொரு திட்டமாகவே ரஷ்யாவுடன் அணுமின் திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடான இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் செயல்படுகிறது.
இந்த திட்டத்தை துரிதப்படுத்தி கட்டுமானத்தை தொடங்கும் என்று இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு உள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி முகாமை குறித்து ரஷ்ய நிறுவனம் ஆராய்வதுடன் நான்கு பணிக்குழுக்களை அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் என்று பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்திருந்தது. அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடட்டதற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032ஆம் ஆண்டில் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.
இலங்கை அணுசத்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.