சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் 1950 மற்றும் 1996 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டவை என பொதுக் கணக்குகள் தொடர்பான நாடளுமன்றக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்றும் இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1115 மோட்டார் சைக்கிள்களில் பதினொரு மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தத்தின் கீழ் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 425 வாகனங்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடிந்த போதிலும், அவை விற்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வாகன நிர்வாக முறைமை தொடர்பில் கோபா குழுவின் தலைவர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்கள் காணாமல் போவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது