வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்- என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற 13 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது தான் மாகாண சபை முறைமை . மாகாண சபையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை தெற்கில் எழுந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுகின்றன.
தமிழ் தரப்பிலிருந்து பல்வேறு வகையான தீர்வுகளை முன்வைத்து தோற்றதன் பின்னரே இந்தியாவின் அழுத்தத்தால் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.
1972 மற்றும் 1978 ம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது தமிழர்கள் சமஷ்டியை முன்வைத்த போதும் இரு யாப்புகளிலும் ஒற்றையாட்சி என தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமஷ்டி என்பதை உள்ளடக்கி இலங்கையில் அரசியலமைப்பு உருவாக வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழர்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு எமக்கு முன்னால் உள்ள தீர்வு மாகாண சபையாக காணப்படுகின்றது.
மாகாணசபை உருவாக்கப்பட்ட போது இது ஒற்றையாட்சிக்கு எதிரானதென உயர் நீதிமன்றத்திலே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டபோது மாகாண சபை துணைநிலை அமைப்புக்கள் தான் என நீதிமன்றம் தெளிவாக தீ்ர்ப்பளித்தது.
இதனிடையே விவசாயம் , கல்வி போன்றவற்றிற்காக மாகாண சபை மூலம் சட்டமாக்கல் இயலுமை உள்ளது.
நியதிச் சட்டங்களை உருவாக்க முடியுமாக இருப்பினும் ஆளுநர்களின் ஒப்புதல்களின்றி பல இடங்களில் சட்டமாக்க முடியாத நிலையுள்ளது.
மாகாண சபை நிலைமைகைள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமாக்க முடிந்தாலும் மாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னரே சட்டமாக்க முடியும்.
நியதிச் சட்டங்களை ஆளுநர் மறுக்கும் தருணம் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ளது.
முழுமையான காணி , பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு காணப்படாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு மாகாண பொஸிசை அமைக்கும் அளவிற்கு அதிகாரமுள்ளது.
மாகாணங்களிலுள்ள சிறிய குழப்பங்களை சீர்ப்படுத்தும் அதிகாரம் மாகாணப் பொலிஸிற்குள்ளது.
மாகாண சபையின் தேவைப்பாட்டுக்கு மாகாண சபைக்குள்ள அரச காணி உள்ள போது அதை பயன்படுத்த முடியுமான இயலுமையுள்ளது.
நாங்கள் பல விதத்தில் பலராலும் பாரபட்சப்படுத்தப்பட்ட சமூகம். ஒரு சுயாட்சிக்கான தனியாட்சிக்கான அதிகாரம் கொண்டவர்களாக எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.
மாகாண சபைச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் நிர்வாகத் திறனை அதிகரிக்க முடியும். இதனை பயன்படுத்தி எமது பிரச்சினைக்குரிய அதியுச்ச தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.
எமக்கான தீர்வை எவ்வாறு அடையப் போகின்றோம் , சிங்கள மக்களுக்கு எவ்வாறு இதை தெளிவுபடுத்தப் போகின்றோம் என்பதை வகுக்க வேண்டும்.
வடக்கும்,கிழக்கும் சட்டரீதியாக இணைக்கும் வாய்ப்பு காணப்படுகையில் வடக்கு கிழக்கு மக்கள் விரும்புதல் வேண்டும்.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்.
தற்போதுள்ள முறைகளை சரியாக பயன்படுத்தாவிடின் எதிர்வருங் காலங்களி் மேலதிக அதிகாரங்கள் கைகளுக்கு வழங்காத நிலை ஏற்படும்.
எனவே 13 ம் திருத்தச்சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி எதிர்காலத் தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.