“இலங்கைத் தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” – விஜயகாந்த்
தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்துக்கு யாரும் அறியாத எத்தனையோ பக்கங்கள் இருக்கிறது. அதேபோலத்தான் அவரின் தமிழ்மொழி மீதான பற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்ட பாசமும் காதலும் அளப்பரியது.
விஜயகாந்த் தனக்கு 13 வயது இருக்கும்போதே மதுரையில் நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தகவலும் சொல்லப்படுகிறது. சிறுவயதிலேயே தமிழ்மீது கொண்ட அந்தப் பற்றுதான் திரைக்கலைஞனான பின்னும் வளர்ந்து, தமிழர்களுக்காகப் போராடவும் தூண்டியது.
குறிப்பாக, 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் புரிந்த கொடூரமானத் தாக்குதலில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைக் கண்டு கொதித்தெழுந்த விஜயகாந்த், இலங்கைத் தமிழர்கள் மீதானப் படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படுகொலையை நிறுத்தவேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி அப்போதைய தமிழ்நாடு ஆளுநரிடம் மனுவும் அளித்தார்.
பின்னர், 1986ம் ஆண்டு இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அதை தடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த்.
அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார். குறிப்பாக, 1989களில் மண்டபம் முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு நேரில்சென்று உதவிபுரிந்தார்.
எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று, இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்தார்.
“இலங்கைத் தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று இலங்கைத் தமிழர்களின் வலியை உணர்ந்தவராக உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன).
இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றைப் போலவே, தனித் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீதும் அளவுகடந்த அன்பையும் மரியாதையையும் கொண்டிருந்தார். அதன் சாட்சியாக தனது மூத்த மகனுக்கு “விஜய பிரபாகரன்” என பெயர்வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.
மேலும், தனது 100ஆவது படத்துக்கு வைத்த “கெப்டன் பிரபாகரன்” என்ற பெயர்தான், அவரின் அடைமொழியாக நின்று இன்றுவரை அனைவராலும் அன்போடு `கெப்டன்’ என அழைக்கப்படுகிறார்.
2009ஆம் ஆண்டில் இலங்கையில் இனப்படுகொலைகளை நிறுத்த வேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம்.
கடல் கடந்த இலங்கைத் தமிழர்கள் மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீதான அவரின் காதலை சொல்லிமாளாது.
2002ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலிக்கே சென்று நடத்திக் காட்டினார்.
எல்லோரும் மாநிலம், மொழி கடந்து தனது திரைப்படத்தைப் பார்க்க வேண்டும், ரசிகர்களை அள்ளிக்குவிக்க வேண்டும் பான் இந்தியா ஸ்டாராக வேண்டும் என எண்ணி தனது ரசிகர் மன்றப் பெயருக்கு முன்னால் `அகில இந்திய’ என்ற முன்னொட்டை வலிந்து சேர்த்துக்கொள்வார்கள்.
ஆனால் விஜயகாந்தோ, `தென்னிந்திய, அகில இந்திய’ என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982இலேயே `தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்” எனப் பெயர் மாற்றம் செய்தவர்.
விஜயகாந்த் தமிழர்கள் மீதும் தமிழர்கள்மீதும் கொண்ட பாசமும் பற்றையும் நினைவு கூர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் அவரின் இறுதி பயணத்தை கண்ணீர் ததும்ப உணர்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறார்கள்!
நன்றி – விகடன்