தண்டிக்கப்பட வேண்டிய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.
தண்டனை மற்றும் மன்னிப்பு என்பன இருதரப்புக்கும் வழங்க வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்ற விஷச் செடியை வேரோடு அழிக்க மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நிறுவனங்களை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்துக்கு அமைய எவரையும் விசாரிக்க முடியாது.பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கவும் முடியாது.ஆகவே சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் விளக்கம் பெற வேண்டும் அத்துடன் நாட்டு மக்களை போல் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரணமானவர்கள் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளிவிவகார அமைச்சர் கடந்த முதலாம் திகதி வெளியிட்டுள்ளார். உண்மையை கண்டறியும் விவகாரம் நீதியமைச்சுடன் தொடர்புடைய நிலையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏன் வர்த்தமானியை வெளியிட வேண்டும் . பிரிவினைவாத கொள்கையுடைய மேற்குலக நாடுகளில் நோக்கங்களுக்கு அமையவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் உண்மையை கண்டறியும் மாதிரியிலான ஆணைக்குழுவை அமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அது உண்மையல்ல,2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தேசிய மட்டத்தில் இவ்வாறான சட்டங்கள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 17 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது.தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டு மக்கள் உயிர் வாழும் சூழலை இராணுவத்தினரே உறுதிப்படுத்தினார்கள்.ஆகவே இராணுவத்தினரை வஞ்சிக்கும் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கும் சட்டமூலம் என்ற விஷச் செடியை வேருடன் அழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.