தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு புதிய அரசியல் கூட்டணி முன்னோக்கி பயணிக்கும். இப்புதிய கூட்டணியின் ஊடாக அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்ட முதலாவது பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் யாருடன் இணையப் போகின்றோம் என்று கேட்கின்றனர். நாம் யாருடனும் தனித்து இணையப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானாலும், பொதுஜன பெரமுனவானாலும் சகலரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதன் காரணமாகவே பல திசைகளிலும் காணப்பட்ட நாம் அனைவரும் இன்று ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளோம்.
75 ஆண்டுகள் வாக்குறுதி அரசியலால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் பிரிவினைவாதங்களால் நாடு பல கலவரங்களை எதிர்கொண்டது. 30 வருட கொடூர யுத்தத்தையும் எதிர்கொண்டது. இனியொருபோதும் அவ்வாறான யுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது.
பிரபாகரனின் யுத்தத்தை வெற்றி கொண்டாலும் எம்மால் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாமலுள்ளது. எனவே, அதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்காக சிறந்த வேலைத்திட்டத்துடன் எவ்வித இன, மத பேதமும் இன்றி இணைந்து பயணிக்க வேண்டும். தற்போதுள்ள இந்த நிலைமைகளின் அடிப்படையில் எம்மால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க முடியாது. எனவே தான் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
வியத்மக அமைப்பை கட்டியெழுப்பி புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றி பெறச் செய்தோம். எனினும் அது தோல்வியிலேயே முடிவடைந்தது. எனவே இனி நாம் அவதானத்துடன் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் முன்னோக்கி பயணிப்போம். அதற்கு எடுத்துக்காட்டாகவே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று எம்முடன் இணைந்துள்ளார். புதிய கூட்டணியின் ஊடாக புதிய அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என்றார்.