நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம் இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது ரெலோ தலைவர் செல்வம்

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.வடகிழக்கிலும் அந்த அலை பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலமை உள்ளது. மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தேசியஇனப் பிரச்சனை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கிறது.
விவசாயிகள் கடற்தொழிலாளிகள் ஏழைமக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன்.அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது.

எங்களை பொறுத்த வரை நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம். எனவே இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

புதிஅரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13வது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலைவரலாம் என கூறப்படுகின்றது.எனவே நல்லவிடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசியமக்கள் சக்திக்கு சென்றிருக்காது.
தமிழ்க்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

பாராளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்ப்பட முடியாது என்பது எனது கருத்து. பொதுவானவிடயத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்ப்படவேண்டும். அதன் மூலமே பலவிடயங்களை நாம் சாதிக்கமுடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள்.யாழில் டக்ளஸ் மற்றும் அங்கயன் ஆகியோரது வாக்குகளே தேசியமக்கள் சக்திக்கு சென்றுள்ளது. தேசியத்தை நேசிக்கின்ற மக்களின் வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லை.

எனவே இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணையவில்லை என்றால். வடகிழக்கில் அரசாங்கம் ஆளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய தவறை நாங்கள் விட்டவர்களாக இருக்கபோகிறோம்.

அந்த நிலையைமாற்றி இனியாவது ஒன்றாக செயற்படவேண்டும். நான் அதில் முனைப்புகாட்டுகின்ற ஒருவன் மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.