முப்படைகளால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

முன்னாள் ஜனாதிபதிகளை விசாரணைகளுக்கு அழைக்கும் நடவடிக்கைகள் தொடரவேண்டும்.
“தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை”- பாராளுமன்ற இரண்டு நாள் விவாதத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 23/1/2025  தினம் ஆற்றிய உரை.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்ஸ்ச அவர்கள் உட்பட பலரை தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை என்ற திட்டத்தின் கீழ் விசாரனைக்காக அழைத்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நடைபெற உள்ள பிரதேச சபை, மாகாண சபை தேர்தலை முன்னிட்ட யுத்தியாக அமையாமல் தொடர்ந்தும் இது போன்ற விசாரனைகள் தொடரவேண்டும்.

முப்படைகள் எமது தாயக நிலங்களை, பொது மக்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளார்கள். ஆலயங்கள் கோவில்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட நிலங்களை எமது வடகிழக்கு பிரதேசத்தில் முப்படைகள் அபகரித்துள்ளார்கள்.இந்த நிலை மாற்றம் பெற்று பொதுமக்களின் பூர்வீக நிலங்களும் பொது காணிகளும்,விவசாய நிலங்களும் பொதுமக்களிடத்தில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

காணிகள் அற்று சொந்த வீடுகள் அற்று எமது மக்கள் வாழும் நிலை நிறுத்தபபடவேண்டும், குறிப்பாக தனி அரசாங்கங்கள் போல் அத்துமீறும் வனலாக திணைக்களம், தொல்பொருள் அகழ்வு திணைக்களம், போன்ற திணைக்களங்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் நிலங்களை, விவசாய பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

இயற்கை அனர்த்தத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவரும் விவசாயிகள், கடற்றொழிளார்கள் எமது பகுதியில் அதிகளவு காணப்படுகிறார்கள். குறிப்பாக தம்மிடம் உள்ளதை அடகு வைத்து மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகள் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக நெல்லுக்கான விலை நிர்ணயம் என்பது இல்லாத பிரச்சனை தொடர்கிறது. வங்கிகளில் கடனை பெற்று ,மாநியங்களை பெற்று விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளது நலன்களில் ,விவசாய உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்

அரசியல்வாதிகளின் ஊழலை வெளிக்கொணரும் அதே சந்தர்ப்பத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழலையும் ,ஊழல்வாதிகளையும் அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும்.

மன்னார் நகரில் நீதிமன்றத்திற்கு முன்பாக நடந்தேறிய கொலைகளுக்கான கொலையாளிகளையும், அதன் காரணிகளையும் துரிதமாக பொலிசார் விசாரனைகளை கையாண்டு கண்டறியவேண்டும். முப்படைகளின் மெத்தனப்போக்கே இவ்வாறான கொலைகள் மன்னாரில் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. பலிக்கு பலி வாங்கும் படலம் தொடர்கின்றது இவ்வாறான குற்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.

மாந்தை கிழக்கிலே அமைந்துள்ள சிவபுல பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும், அத்தோடு முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும். ஊழல் வாதிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் நிரூபிக்க முடியாத, பொய் குற்றங்களை சமூக வலைத்தளங்களில் பகிரப்படல் சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும்.