பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் விவாதத்தில் இராணுவத்தினர் எமது தாயக பகுதிகளில் கட்டட உபகரணங்கள் விற்பனை நிலையம் , உணவு நிலையங்கள், மற்றும் சிகை அலங்கார நிலையங்களை நடாத்திவருகிறார்கள் என்றும் அவர்களால் ஈட்டப்படும் வருமானங்களை யார் ஈட்டிக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கெளரவ அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அவர்களும் வன்னியில் ஒரேயொரு சிகை அலங்கார நிலையம் மட்டும் இராணுவத்தால் கையாளப்பட்டு வருவதாக கூறியிருந்தனர்.
அவர்களின் கூற்று உண்மைக்கு புறப்பானதாக காணப்படுவதுடன் சிகை அலங்கார சங்கங்களின் சம்மேளனம் எமது தாயக பகுதிகளில் எங்கெங்கே இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விற்பனை நிலையங்கள் தொடர்பாகவும் அவை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை என்பன அடங்கலான முழுமையான தரவுகளை வழங்கியுள்ள நிலையில் மேற்படி தரவுகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் அமைச்சர் கெளரவ விமல் ரத்நாயக்க அவர்களுக்கு அவசர கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

