பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னார், மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்தரையாடினார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.
மன்னார் பிரதேச செயலாளர் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆகிய மூன்று பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பொன்றை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்றைய தினம் 5/12/2025 வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.
மேற்படி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் மாந்தை பிரதேசங்களில் அதிகளவிலான அனர்த்தங்களும், அழிவுகளும், ஏற்பட்டுள்ளது, குறிப்பாக மடு மற்றும் மாந்தை பகுதிகளில் உள்ள பிரதான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டு தொடர்புகள் அற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. மடுப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகிறது. பாதைகள் முற்றாக அழிந்துள்ள நிலையே அதிகம் காணப்படுகிறது.
மற்றும் பல்வேறுபட்ட கிராமங்களில் மின்சாரம் மற்றும் மின்சார இணைப்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுவதுடன் கடந்த பேரிடர் காலத்தில் பிரதேச செயலக நடவடிக்கைகள் முற்றுமுழுதாக ஸ்தப்பித்திருந்ததுடன்,மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலகத்தினுடைய தொலைத்தொடர்புகள் யாவும் முற்றுமுழுதாக தடைப்பட்டிருந்துள்ளது. இதன் காரணமாக பேரிடரின் போது கிராமங்களின் நிலைபற்றிய தொடர்புகள் கிராம சேவகர்களின் நிலை மற்றும் செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பலதரப்பட்ட விடயங்களை அறியமுடியாதிருந்துள்ளது.
தற்பொழுது பேரிடரால் பாதிக்கப்பட்ட பேரிடர் நிவாரண நிதி 25000/= வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபை தவிசாளர்கள ,உறுப்பினர்கள் ஊழியர்கள், கிராம சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலரும் இரவு பகல் பாராது தங்களது மக்களுக்கான முழுமையான பணிகளை ஆற்றிவருகின்ற நிலை காணப்படுகிறது.
மடு பிரதேசத்தில் பல கிராமங்கள் பல்வேறுபட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் உடைக்கப்பட்டதுடன், பெருக்கெடுத்து பாயும் வெள்ள நீர் மற்றும் கட்டுக்கரை குள நீர் போன்ற நீர் நிலைகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட துர்ப்பாக்கிய சூழல் நிலவியிருந்தது.
மற்றும் மன்னார் குஞ்சுக்குளத்தை சூழ உள்ள பல்வேறுபட்ட கிராமங்கள் புயலின் தாக்கத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவ் பகுதிகளுக்குள் பேரிடர் நேரத்தில் யாருமே செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. பாதைகள் யாவும் மழை வெள்ளத்தால் நிரம்பி துண்டிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது குஞ்சுக்குள பகுதிகளுக்கான ஒரு பாதை பாவிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. அந்த பாதையினூடாக அனர்த்த முகாமைத்துவ நிர்வாகம், பிரதேச செயலகம் போன்றன மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசத்தில் அதிகளவு கால்நடைகளும், வீதிகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. மக்களது வாழ்வாதார கால்நடைகள், அழிவுற்ற நிலையும், விவசாய நிலங்களும் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் இவ் அழிவுகளுக்கான இழப்பிடுகளை எந்த வகையில் பெற்றுக்கொள்ளுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதில் நேரம் காலம் பார்க்காது மக்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக தமது சேவையில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையிலே பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மடு ,மாந்தை மற்றும் மன்னார் நகர பிரதேசம் ஆகியவை அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளாக காணப்படுவதுடன் இலங்கையில் வட மாகாண ரீதியில் மன்னார் மாவட்டம் அதிகளவான பாதிப்பையும், முல்லைத்தீவு , வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவை பாதிப்புகளை அடைந்துள்ளதுடன் ஆரம்பத்தில் மன்னார், பூநகரி பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ,மற்றும் குடி நீர் வழங்கல் துண்டிக்கப்பட்ட நிலை காணப்பட்டது என்றும் பிரதேச செயலாளர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கால்நடைகளின் இறப்பு மிக மோசமாக எமது பகுதியில் நடைபெற்றது என்றும் குறிப்பிட அளவில் இறந்த கால்நடைகளை புதைத்திருந்தாலும் பேரிடரால் அகப்பட்ட கால்நடைகள் காடுகளில் இறந்து நிலையில் அவற்றை அகற்றமுடியாத சூழ்நிலையில் அவற்றின் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது என்ற அச்சமும் நிலவுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.