IMF அதிகாரிகளினால் அமைச்சரவைக்கு தௌிவூட்டல்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இதனை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததுடன் அமைச்சர்களும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் அமுல்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Posted in Uncategorized

ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கார்பன் வளர்ச்சி தொடர்பான கூட்டு கடன் பொறிமுறை உடன்படிக்கை

ஜப்பானும் இலங்கையும் குறைந்த கார்பன் வளர்ச்சி பங்காளித்துவத்திற்கான கூட்டு கடன் பொறிமுறை (JCM) தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட்டன.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து, ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது (2013-2020) ஜப்பான் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.

அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப் பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சி! பெபரல் அமைப்பு

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பெபரல் என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை நியமித்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறையில் திருத்தம் செய்வதாகவும், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்வதாகவும் கூறி அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தேர்தல்களை காலம் தாழ்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் இவ்வாறான பல குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்ட போதிலும் எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வஜன வாக்கெடுப்பு நடத்த நிதி வசதி இருந்தால் ஏன் தேர்தல் நடத்தப்பட முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறெனினும், தேர்தலில் செலவு செய்யும் நிதி குறித்த உத்தேச சட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டப் பரிந்துரைகளை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே காரணம்-சர்வதேச நாணய நிதியத் தலைவர்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, மீண்டும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டக்காரர்களை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்தனர் – மனித உரிமை ஆணைக்குழு கேள்வி

காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்தனர் என்ற விபரத்தை 24 மணிநேரத்தில் பொலிஸார் சமர்ப்பிக்கவேண்டும் என இலங்கைமனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட நால்வர் இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக சம்பந்தன் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறலை செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும் சர்வதேச மன்றங்களிலும் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வை காண்பதாகவும் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது வரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புலம்பெயர்ந்தோரால் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்:மத்திய வங்கி தகவல்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.6 வீதம் அதிகரித்து 1,717 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்டில் 1,657 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த மாதம் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய ஒதுக்கங்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கக் கையிருப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயர்ந்து, 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, உத்தியோகபூர்வ கையிருப்புக்கள் 2021 டிசம்பர் முதல் நிலையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

சரிவுக்கு முன்னதாக இறுதியாக உத்தியோகபூர்வ கையிருப்பு 3,139 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பல் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஆகஸ்ட்டில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான வெளிநாட்டிலுள்ள பணியாளர்களின் பண அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் 359 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

2022 ஜூலையில் பதிவான பண அனுப்பலுடன் ஒப்பிடுகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 29% இனால் (80 மில்லியன் டொலரினால்) அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புலம்பெயர் பணியாளர்களின் பணம் அனுப்புதல் 2,574.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (43.8%) குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செலவீனங்களில் உலக சாதனை படைத்த இலங்கை

உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது.

உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில் அதிகம் செலவிடும் நாடு வடகொரியா எனவும் இதன்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் அரசாங்க செலவில் அதிக சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளன.

இவ்வளவு பெரிய பாதுகாப்பு செலவினங்களைக் கொண்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு எதிர்மறை 9 வீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, அத்தாண்டில் நாட்டின் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் சுமார் 200,000 தொழிலாளர்கள் வேலை இழப்பர் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே அதிக சதவீத அரச ஊழியர்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை திகழ்கிறது என்பதும் அந்த அறிக்கை காட்டும் மற்றுமொரு விசேட விடயமாகும்.

இலங்கை பணியாளர்களில் 18 சதவீதமானோரர் அரச ஊழியர்களாகும். ஆனால் மிகவும் வளர்ச்சியடைந்த நாடான மலேசியாவில் அந்த சதவீதம் 14 சதவீதமாகும். மியான்மரில் 5 சதவீதமும், ஒட்டுமொத்த ஆசியாவிலும், மற்ற நாடுகளில் உள்ள அரச ஊழியர்களின் விகிதம் 10 சதவீதமாகும்.

இந்த தனித்துவமான பொருளாதார தரவுகளை குறிப்பிடும் கணக்கெடுப்பு அறிக்கையானது, நிதியமைச்சகத்துடன் இணைந்து நாட்டில் உள்ள பிரபல தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார் .

இதனையடுத்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீடுகளுக்குள் புகுந்த பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளின் கதவுகளை பாதுகாப்பான முறையில் பூட்டி வைக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Posted in Uncategorized