திருமண சுற்றறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

இலங்கையர் வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி சான்றிதழை பெறும் புதிய சுற்றறிக்கையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சரான சமல் ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் 112ஆவது அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தி, புதிய சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர், யுவதிகள், தத்தம் பண்பாடு, கலாசார, மரபியல் அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும் என சிறிதரன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சுற்றறிக்கையின் மூலம், மாதாந்த வேதனமற்ற கௌரவ பதவியை உடைய கிராமிய விவாகப் பதிவாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விவாகப் பதிவை மேற்கொள்ள முடியாதென தடைசெய்து, அதற்கான அதிகாரத்தை மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கியிருப்பது, அவர்களை அகௌரவப்படுத்தி, உளவியல் தாக்கங்களுக்கு உட்படுத்துவதாகவும், மாதாந்த வேதனமோ, நிலையான வருமானமோ அற்ற அவர்களுக்கு, விவாகப் பதிவின் போது வழங்கப்படும் சிறு வருமானத்தை இல்லாமற்செய்வதாகவும் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் சிங்கள மக்களின் திருமணச் சடங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக இலங்கையில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்களையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் தனிமனித வாழ்வின் பிரதான அங்கமாக உள்ள திருமணம் என்பது மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படைக் கூறாக, அக்கூறுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அடையாளமாகவே காலம்காலமாக பின்பற்றப்பட்டுவருகிறது.

எனவே தமிழர்களின் இயல்பான வாழ்வில் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்து, இந்நடைமுறை மூலம் தமிழர்களும், கிராமிய விவாகப் பதிவாளர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிதரன் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

சந்திரிகா தலைமையில் விரைவில் புதிய கூட்டணி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதுடன், அதில் அரசாங்கத்திலுள்ள சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில் சந்திரிகா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் நயினாதீவில் வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

“பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இதன்போது இன்று பிற்பகல் நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதேவேளை இலங்கை பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜமகா விகாரைக்கும் அவர் சென்றிருந்தார்.

இதன்போது விகாரையின் பிரதம தலைமை தேரர், அதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் – தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 மீனவர்களையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அவர்களை விடுவித்து அவர்களது வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்குமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் இந்தியா அளித்த உறுதிமொழி

கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன்  தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார். இலங்கைக்கான கடனுதவியை நீடிப்பது தொடர்பாக மேலும் ஆலோசித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘அண்டை நாடுகளின் முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கையை முக்கியமான பங்காளியாக இந்தியா ஆதரிக்கும் என புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுவது தமிழீழத்துக்கான வரைவா? கேள்வி எழுப்பும் அமைச்சர் தினேஷ் குணவர்தன

லையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப் புலிகளின் கனவான தமிழீழத்துக்கான வரைவாகவே இருக்கும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப் புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் நேற்று ஒப்பமிட்டனர். இதில் மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் ஒப்பமிடவில்லை.

இது தொடர்பில் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில் – அதன் தலைவர்களுக்கிடையில் பொது வான இணக்கப்பாடு இல்லை; ஒற்றுமை இல்லை. இந்தியப் பிரதமருக்கான பொது ஆவண விவகாரம் இதை வெளிக்காட் டுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது. இலங்கை எனும் எமது நாட்டில் உள் ளகப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை.

நாட்டின் அரசுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும். தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தை நாடுவதுதான் விசித்திரமாகவுள்ளது” என்றார்.

Posted in Uncategorized

திருமலை எண்ணெய் குதங்கள்; கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

திருமலை எண்ணெய் குதங்கள்: திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு முயற்சி- மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்றித்தருமாறு உப்புவெளி காவல் நிலையத்தில் பௌத்த துறவி ஒருவரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்த காவல் துறையினர் அக்கடைகளை அகற்றுமாறு அறிவுருத்தியிருந்த நிலையில் ஒன்று திரண்ட அப்பகுதி வாசிகளால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் பொதுமக்களோடு இணைந்து பாராளுமன்ற உருப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படும் இக்காலகட்டத்தில் அரசு இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன். தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலான பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அரசால் முன்னெடுக்கபடும் இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் பாராளுமன்ற உருப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கை

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்படுவதாக இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அந்நிய செலாவணிநெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் மிகவும் அவதானமாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

கடன்பத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றன என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் ஏனைய வங்கிகள் ஏற்றுமதியாளர்களின் நிலை தொகை கடன்காலம் மற்றும் கடன்பத்திரங்களை வழங்கும் வங்கிகளின்நிலை ஆகியவற்றை அடிப்படையாகவைத்து கடன்பத்திரத்தை வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையால் தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என வங்கியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி ஒரு மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்பட்டது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஏற்றுமதியாளர்களின் ஆவணங்கள் மீது நாங்கள் முழுமையான தடையை விதிக்கவில்லை கடன்பத்திரத்தை வழங்கும் வங்கிகளின் நிலைமையை அடிப்படையாக வைத்து இதனை முன்னெடுக்கின்றோம் என ஸ்டேட் பாங் ஓவ் இந்தியாவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய வங்கிகளில் எச்டிஎவ்சி வங்கி இலங்கைக்கான ஏற்றுமதி கடன்பத்திரங்களை கையாள்வதில் அவதானமாக செயற்படுகின்றது. இலங்கைக்கான பல ஏற்றுமதிகளிற்கு நிதி வழங்கிய அக்சிஸ் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்இந்த விவகாரத்தை கையாள்கின்றது.

இலங்கை வங்கிகளில் எந்த தவறும் இல்லை ஆனால் கொடுப்பனவுகள் தாமதமாகும் போது அந்த நாட்டின் அந்நிய செலாவணி சந்தையில் போதிய அளவு டொலர்கள் கையிருப்பில் இருக்காது என வங்கியாளர் ஒருவர்தெரிவித்துள்ளார். 2020இல் இலங்கைக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 3.2 பில்லியனாடொலராக காணப்பட்டது.

Posted in Uncategorized

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை”: மனோ, திகா, இராதா கூட்டறிக்கை

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

அதேவேளை, பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முடிவுகளை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.

இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, தமுகூ மனோ கணேசனும், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது.

எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.

இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது.

மேலதிகமாக இந்த ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம்.