மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

விக்கும் அதுல களுஆராச்சி தனது 33 வருட சேவையில் 27 வருடங்கள் நீதவானாக, மாவட்ட நீதிபதியாக, குற்றவியல் மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

2021 டிசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப் பரிமாற்று நிறுவனங்கள் அத்துடன்/ அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவின் வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர் எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாகவிருக்கும். தொடங்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் வழங்கப்படும்.

Posted in Uncategorized

25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

D.M.L.D. பண்டாரநாயக்க, விவசாய அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்தாவது செயலாளராவார்.

இதனிடையே, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி மூலம் மாத்திரமே அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

உண்மையை உரைத்தமையே தாம் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தாம் வினவிய போது, அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்ததாக சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக ஷானி அபேசேகர மனுத்தாக்கல்

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய செயற்படத் தவறியதன் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணையாளர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்மானித்து அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஏனைய பிரதிவாதிகளாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையின் தலைவர் நிஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு தமக்கு விடுத்த அழைப்பை ஆட்சேபித்து ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்தாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில், தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்ததாக ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நீதிமன்றத்தில் வாக்குறுதியளித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் பரிந்துரைகளை முன்வைத்ததன் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளதாக அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் நீதிமன்ற அவதூறு செய்துள்ளதாக தீர்மானித்து, அரசியலமைப்பின் 105 – 3ஆம் சரத்திற்கு அமைய அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்துமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளை குற்றவாளிகளாக தீர்மானித்து தண்டனை வழங்குமாறும் ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது இலங்கைக்கு பேராபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார்.

யார் எவ்வாறான யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மிக ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினையை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நாட்டுக்கு முதலீடுகளோ சுற்றுலா பயணிகள் வருகையோ இடம்பெறாமல் விடலாம்.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்குச் சென்றால் அவர்கள் கண்டிப்பாக வட்டி வீதத்தை அதிகரிப்பதாகவும் நாணயத்தின் பெறுமதியை குறைக்க இடமளிக்குமாறும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யுமாறும் ஓய்வூதியக் கொடுப்பனவை குறைக்குமாறும் கூற வாய்ப்புண்டு.

அதுமட்டுமன்றி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி வரும். நாட்டின் நெருக்கடி நிலைமையைச் சிறந்த முகாமைத்துவம் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ். மாணவன் கொலை: சகோதரனால் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தற்கொலை என மூடிமறைக்க முற்பட்ட சகோதரனின் கொலைச் சம்பவத்தை வெளிக்கொண்டுவர  முனைவதன் காரணமாக, இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொடர்பில், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் சகோதரனால், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று (21) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், 17.11.2020 அன்று, அவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு, தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை பொலிஸார் தற்கொலை என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அவரது சகோதரன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் பணிப்புக்கமைய, யாழில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழு, இவ்வாண்டு, மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், உறவினர்களால் இக்கொலை தொடர்பில் சந்தேகநபர்களும், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதாவது, அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கதவு திறந்தவர்கள் ஊடாகவே மேற்படி மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவந்தது.

ஆனால், அதற்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு சமூக ஊடகத்தில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர்களின் ஊரிலும் பலருக்கு மாணவன் இறந்தமை தொடர்பான தகவல் தெரிந்திருந்தது.

இது தொடர்பான தகவல்களை விசாரணை குழுவுக்கு வழங்கியும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் சில இல்லை எனவும் மீண்டும் தகவல் தருமாறும் விசாரணைக் குழுவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) விசாரணை பிரிவுக்கு சென்று தாங்கள் வழங்கிய தகவல்கள் எவ்வாறு தவறவிடப்பட்டது என பொலிஸாருடன் முரண்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் பின்தொடர்ந்ததன் காரணமாக அவரது சகோதரன் தனது வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவரது சகோதரன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முன்தினம், (21) மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Posted in Uncategorized

“நடக்க கூடாது” என விரும்பியவர்களை தோல்வியுற செய்த நிகழ்வு – மனோ கணேசன்

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. “நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு குறித்து தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரவந பதிவில்,

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.

“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.

தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.

நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.

ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை. ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.

இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.

அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன். இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன். எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.

Posted in Uncategorized

17 புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!

புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, ஹங்கேரியா, மொரிடானியா, தூனிசியா, ஆர்ஜென்டினா, டொமினிக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சியெரா லியோன், ருவாண்டா, பொஸ்ட்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிய நியமனங்களைப்  பெற்றுள்ளனர்.

1.சியெரா லியோன் உயர்ஸ்தானிகராக எர்னஸ்ட் மைம்பா (Ernest Mbaimba)

2.ஜோர்தான் தூதுவராக மொஹமட் எல்-கைட்  (Mohamed El- Kayed)

3.கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் தூதுவராக சோய் ஹுய் சோல்  (Choe Hui Chol)

4.ருவாண்டாவின் உயர்ஸ்தானிகராக திருமதி முகங்கிரா ஜாக்குலின் (Mukangira Jacqueline)

5.பொஸ்ட்வானாவின் உயர்ஸ்தானிகராக கில்பர்ட் ஷிமேன் மெங்கோல் (Gilbert Shimane Mangole)

6.மோல்டாவின் உயர்ஸ்தானிகராக ரூபன் கௌசி (Reuben Gauci)

7.ஹங்கேரியாவின் தூதுவராக அண்ட்ரெஸ் லஸ்லோ கைரலி (Andras Laszlo Kiraly)

8.மொரிடானியாவின் தூதுவராக மொஹமட் அஹ்மத் ராரா (Mohamed Ahmed Rara)

9.தூனிசியாவின் தூதுவராக திருமதி ஹயத் தல்பி பிலேல் (Hayet Talbi Bilel)

10.ஆர்ஜென்டினாவின் தூதுவராக ஹியூகோ ஜேவியர் கோபி (Hugo Javier Gobbi)

11.கயானா குடியரசின் உயர்ஸ்தானிகராக சர்ரண்டாஸ் பெர்சாட் (Charrandass Persaud)

12.எகிப்தின் தூதுவராக மகெட் மொஸ்லே நஃபீ (Maged Mosleh Nafei)

13.டொமினிகா குடியரசின் தூதுவராக டேவிட் இம்மானுவேல் பக் (David Emmanuel Puig)

14.நைஜீரியாவின் உயர்ஸ்தானிகராக அகமத் சுலே (Ahmed Sule)

15.இந்தோனேசியாவின் தூதுவராக திருமதி டேவி கஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing)

16.ஸ்பெயினின் தூதுவராக ஜோஸ் மரியா டொமிங்குஸ் (Jose Maria Dominguez)

17.ஸ்லோவேனியாவின் தூதுவராக திருமதி மாதேஜா கோஷ் (Mateja Ghosh)

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் பிரதம ஒருங்கணைப்பு அதிகாரி துஷார ரொட்ரிகோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரு தடவைகள் தோல்வியடைந்தது. இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

தமிழ் கூட்டமைப்பு சார்பில் சோ.சத்தியேந்திரனும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபனும் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இருவரும் தலா 12 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் 26 உறுப்பினர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் பிரசன்னமாகவில்லை.

காரைநகர் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 2வது முறையும் தோல்வி

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபை அமர்வு இன்று (21) தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேட்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

அதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதைய தவிசாளர் உயிரிழந்ததால், கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் சுயேட்சைக் குழு வசமானது.

பின்னர் புதிய தவிசாளரால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால், திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized