வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் – உடன் வெளியேற்றுமாறு வலியுறுத்து

வட மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்   வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் நீர், சுற்றாடல், மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் பிரசன்னம் குறித்து அவர் தமது கரிசனையினை வெளிப்படுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வடக்கில் பாரியளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே வடக்கில் தங்கியுள்ள மேலதிக இராணுவத்தினரை உடன் வெளியேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்மையினால் தம்மால் அதில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம் காலாண்டில் 2,536,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டிற்கான நிலையான விலையில் 2,497,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,087,148 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,132,955 மில்லியன் ரூபாவாக 1.1 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் , தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன

இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத விதத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது என்பதை நாம் ஆராய்ந்ததுடன், இது குறித்த அறிக்கையை மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தோம் என கமல் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயங்களில் சர்வதேச தரப்பினர் ஒரு காரணியை வெளிப்படுத்தி அறிக்கையொன்றை முன்வைக்கையில், அதற்கு நாம் பதில் தெரிவிக்க தயாராகும்போது, அது குறித்த வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக மற்றப்பக்கத்தில் வேறொரு அறிக்கையை முன்வைத்து முற்றிலும் மாறுபட்ட காரணிகளை வலியுறுத்துகின்றனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ரெலோவின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் மீதான வழக்கில் திருப்பம்?

கல்முனைமாநகரில் அமைக்கப்பட்டிருந்த வீதிப்பெயர்ப் பலகையொன்றினை உடைத்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  உபதலைவரும் த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான குலசேகரம் ஹென்றி மகேந்திரன் மீது தொடரப்பட்ட  வழக்கில் திருப்பம் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு வருடங்களாக இவ்வழக்குவிசாரணை  கல்முனை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.

இவ்வழக்கின் 34ஆவது தவணை கடந்த 15 ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எம்.சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அச்சமயம் கல்முனை மாநகரசபையின்கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக்  சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவர் அதற்கு பூரண தயார்நிலையில் இல்லாமையினால் மேலதிக விசாரணைக்காக வழக்கை அடுத்த வருடம்  பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் சம்சுதீன் ஒத்திவைத்தார்.

ஹென்றிமகேந்திரன்சார்பில் பிரபல சிரேஸ்டசட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவின் வழிநடாத்தலில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ,சட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்நிலையில் 35ஆவது தவணையின்போது எதிர்பாராத திருப்பம் ஏற்டலாமென தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு – ரெலோவின் இளைஞர் அணித் தலைவர்

சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே சிறிலங்காவின் டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார, டொலர் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை அரசாங்கம் தற்போது எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறையாகும். கஐானாவில் இருப்பில் உள்ள டொலர் 1.5 பில்லியனாகும் ஆனால் டிசம்பர் மாத இறுதியில் சர்வதேச தவணைக் கடன்கள் செலுத்த 2 பில்லியன் டொலர் தேவை அத்துடன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை அத்துடன் துறைமுகத்தில் கப்பல்களில் காத்திருக்கும் உணவுப் பொருட்களை இறக்க வங்கிகளினால் எல் சீ கொடுக்க முடியாத அளவிற்கு டொலர் பற்றாக்குறை உள்ளது இதனால் பெரும் நெருக்கடிக்குள் ஏழாம் அறிவு நிதி அமைச்சர் உட்பட்டுள்ளார்.

டொலரை பெற அமைச்சர் பசில் இந்தியா சென்று முதல் கட்டம் 500 மில்லியன் டொலர் கோரியுள்ளார் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கேட்டுள்ளார் தற்போது 16 திகதி டுபாய்க்கு சென்றுள்ளார் டொலர் தேடும் பணிக்கு ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ராஐதந்திர வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்துள்ளன இதனால் மேலும் நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஐனாதிபதியின் பிடிவாதப் போக்கினாலும் மத்திய வங்கி ஆளுநரின் பதவி ஆசையாலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் , உலக வங்கி, ஜீ 7 நாடுகள் போன்றவற்றை நாட விடாது தடுப்பதாக ஆளும் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர் .

உண்மையாக சிங்கள மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீறி பல நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை இருப்பதன் காரணமாகவே ஐனாதிபதி சர்வதேச நாயண நிதியம் போன்ற அமைப்புக்களிடம் செல்ல மறுப்பதற்கான உண்மை நிலை. ஆனால் என்ன நிபந்தனை வந்தாலும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுதான் டொலர் பிரச்சினைக்கான தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வேண்டும்

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால், இன்று(16) அறிவிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இறுதிப் போரின் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு, இன்று (16) வழங்கப்படவிருந்தது எனவும் இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று, அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது எனவும் அந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றின் தீர்ப்பு, இன்றுவழங்கப்படுவதாக இருந்தது  எனவும் கூறினார்.

எனினும், அந்தத் தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தமக்கு அறிவித்துள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் அக்கடிதத்தின் ஊடாக ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டம் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்கும் அதேவேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பியோனுவாலா நி ஓலெய்ன், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் தலைமை அறிக்கையாளர் லூசியானோ ஹஸன், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான், அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் கலந்துரையாடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நியாலெற்சொஸி வோல், சிறுபான்மையினர் விவகாரங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பெர்னான்ட் டி வரேனெஸ், மத நம்பிக்கைசார் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் மற்றும் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகள் அல்லது தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸெர் ஆகிய எழுவர் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுடைய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தெளிவுபடுத்தலை வரவேற்கின்றோம். அதேவேளை மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்பயங்கரவாத்தடைச்சட்டத்தில் காணப்படும் சரத்துக்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமையினை நினைவுறுத்துவதுடன் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதனை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உங்களது அரசாங்கத்திற்கு மீளவலியுறுத்துகின்றோம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் சிலர் பயங்கரவாத்தடைச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை சீர்செய்வதற்கான பரிந்துரைகளை உங்களுடைய அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தனர். இருப்பினும் அந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப்படாததுடன் மாத்திரமன்றி உரிமைகள் மேலும் மறுக்கப்படக்கூடியவாறான நடைமுறைகள் உள்வாங்கப்பட்டமை கவலையளிக்கின்றது.

எதுஎவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை வரவேற்கின்றோம். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் உங்களுடைய சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் ஏற்புடையவகையிலும் அமைவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மேலும் சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டுமெனில், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தை வழங்கல், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் கருத்துச்சுதந்திரம், கலந்துரையாடல்கள் மற்றும் மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றில் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் பட்சத்தில் சட்டப்பிரயோகத்தின் துல்லியம் உறுதிப்படுத்தப்படல், சுதந்திரத்தைத் தன்னிச்சையாக மட்டுப்படுத்தும் வகையிலான சரத்துக்கள் திருத்தப்படல், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்புசார் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல், நீதிமன்ற மேற்பார்வை மற்றும் சட்ட உதவியை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளடங்கலாக நியாயமான விசாரணைப் பொறிமுறை பின்பற்றப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் என்பன பூர்த்திசெய்யப்படவேண்டும்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை நாம் மீளவலியுறுத்த விரும்புகின்றோம். இச்சட்டத்தின்கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படக்கூடியவர்களின், குறிப்பாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மையினரின் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படக்கூடிய) உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான அச்சுறுத்தலும் உரியவாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதற்கான உத்தரவாதமின்மையும் இதுபற்றிய கரிசனைகள் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன. நீதிமன்றத்தின் உரியவாறான மேற்பார்வையின்மை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவான நடைமுறைகள் பின்பற்றப்படாமை என்பன அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடும்.

ஆகவே உடனடியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, கரிசனைக்குரிய அனைத்து சரத்துக்களையும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின்கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி மேற்கூறப்பட்டவாறு அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் கோருகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

 இலங்கை நெருங்கும் ஆபத்து : ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்கான முனைப்பில் தேசிய மனித உரிமைகள் சார் கட்டமைப்புக்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதுடன் பாரிஸ் கொள்கைகளுக்கு அமைவாகச் செயற்படுவதற்கு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டி ஆணைக்குழுவை ‘ஏ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்கு தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவு பரிந்துரை செய்திருக்கின்றது.

உலகநாடுகளின் மனித உரிமைகள் நிறுவனங்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவினால் ‘ஏ’, ‘பி’ என்ற அடிப்படையில் தரப்படுத்தப்படும்.

அந்தவகையில் மேற்படி கூட்டிணைவின் கடந்தகாலத் தரப்படுத்தலின்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ என்ற நிலையில் காணப்பட்டது.

இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்நிலையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை ‘ஏ’ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்குத் தரமிறக்கம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் 18.1 சரத்தின் பிரகாரம், மேற்படி ‘தரமிறக்கப் பரிந்துரை’ ஒருவருடகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படாது.

அதன்படி எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் வரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ என்ற நிலையிலேயே இருக்கும். இக்காலப்பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ‘மனித உரிமைகள் குறித்த பாரிஸ் கொள்கைகளுக்கு’ அமைவான தமது செயற்பாடுகளை தொடர்பான ஆதாரங்களையும் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்.

அதேவேளை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையை ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கையாளப்படும் முறைமை, ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்வாங்கப்படும்போது இனரீதியான பன்முகத்தன்மைக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படாமை மற்றும் ஆணைக்குழுவிற்குரிய ஆணைகள் செயற்திறனுடன் பின்பற்றப்படாமை என்பன தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ரவரி மாதம் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்றன.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பாலசிங்கம் : ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமின் 15 ஆண்டு நினைவேந்தல் இன்று ஆகும்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

காரணம் அன்றைய காலத்தில் உலக நாடுகளில் இருந்த இராஜ தந்திரிகளுடன் துணிவுடனும், தந்திரோபாயத்துடனும், உறுதியாகவும் பேசக் கூடிய ஒருவராக தமிழர்கள் தரப்பில் விளங்கினார்.

அன்ரன் பாலசிங்கம் திறமையை பேச்சுவார்த்தை மேசையில் எதிர்த் தரப்பினரே வியந்து பார்த்த சந்தர்ப்பங்கள் உண்டு. உண்மையாக பாலசிங்கமின் மரணம் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்வியில் வெளிநாட்டு நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் தரப்பில் இன்றுவரை இராஜதந்திர இடைவெளி வறிதாகவே தொடர்கின்றது. ஈடு செய்ய முடியாதா நிலை காணப்படுகின்றது .

தீர்க்கமாக முடிவுகளை பூகோள இராஐதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப எடுக்கும் வல்லமை கொண்டவராக இலங்கை ஆட்சியாளரின் எந்த சக்திகளுக்கும் விலைபோகாத இனப் பற்றாளனாக தன்னை தியாகம் செய்தவர் தேசத்தின் குரல் .

அந்த வகையில் தமிழர் தேசத்தின் குரலாக ஒலிப்பதற்கு பாலசிங்கத்தின் மரணத்திற்கு பின்னர் தமிழர்கள் தரப்பில் சிறந்த இராஐதந்திரி இல்லை என்ற வேதனையை அவரது நினைவு நாளில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல இன்று சில சின்னத்தனமா அரசியல்வாதிகள் அன்ரன் பாலசிங்கத்தை ஓப்பீடு செய்து பேசுவதும், இனத்தின் அடிப்படை வரலாறு தெரியாத தரகர்களை இராஜதந்திரிகள் என்று கத்தும் ஊழையும் தான் பெரும் அவலமாக தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.