இலங்கையின் ஈடுபாடு அவசியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம்,  இலங்கை அரசாங்கம் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த முழுமையான அனைவரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களிற்கு முழுமையான ஆதரவளிப்போம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள், நிறுவனங்களில் மாற்றம்

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் நிறுவனங்களில் மாற்றம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர், கைத்தொழில் அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கீழான ஒரு சில பணிகள் பொறுப்புகளே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஆட் பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய நிறுவனங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்! முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுமாறு மீண்டும் அழைப்பு

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
ஜப்பான்-பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
கடன் வழங்கி உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி, கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமெனவும் இங்கு குறிப்பிட்டார்.
அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும் தென்கிழக்காசியாவுடனான நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

விவசாயத் துறை தொடர்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் கடந்த போகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அறுவடையை பெற முடிந்ததாகவும், அடுத்த பெரும் போகத்தை எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் என்பன தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்.

Posted in Uncategorized

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) முற்பகல் கூடிய போது, புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

22 ஆம் திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைப்பு!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்தத் திருத்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இன்றும் (06) நாளையும் (07) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு கடந்த 29 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை 4இடம் மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற மீனவர்கள், கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் , சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் முந்நூறு பேர் முல்லைத்தீவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தாக்க குறித்த மீனவர்கள் முற்ப்பட்டபோது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் “அமைதியான முறையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களான தம்மீது, சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளின் ஆதரவோடு ஈடுபட்டுவரும் மீனவர்கள் இன்று தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளார்கள் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத தொழில்களுக்கு எதிரான மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்- புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையையும் பரிந்துரைகளையும் நாங்கள் பாராட்டுகின்றோம்.

இன்று நாங்கள் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பில் காணப்படும் சவால்கள் குறித்தும் சாட்சிகளின் பாதுகாப்பிற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டிய அவசரதேவை குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை 46\1 தீர்மானத்தின் அடிப்படையிலான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை போதுமானதல்ல அதனை முழுமையான சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதற்கான முழுமையாக ஆதாரங்களை சேகரிப்பது அடிப்படையாக அமையும் அதேவேளை சாட்சிகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளன.

புலனாய்வு உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதற்கு மிரட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது சாட்சியங்களை ஒன்றுசேர்ப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.

அரசாங்கத்திலிருந்து சாட்சிகளை பாதுகாப்பதற்கானசுயாதீனமான பொறிமுறையை ஐநா குழு முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.மேலும் அச்சுறுத்தல்களிற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கும் அரசாங்க அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வீடுகளிற்கு வரும் பாதுகாப்பு படையினர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற அச்சங்களும் பயங்கரவாத விசாரணைபிரிவிடமிருந்து விசாரணைக்கு வருமாறு கடிதங்கள் கிடைப்பதும் இலங்கையில் உண்மையில் இடம்பெறும் சம்பவங்கள்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து விசாரணைக்கு வருமாறுஅழைக்கப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமானவர்களிற்கு எதிராக ஐநா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 13 வருடங்கள் தாமதமாகிவிட்ட நீதியை வழங்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணயஉரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வையும் முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.எவ்வாறாயினும், இலங்கை அதனை எதிர்க்கும் எனவும், வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

30 நாடுகளின் இணை அனுசரணையுடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.

தனது தோல்வியை மறைக்க இரகசிய பிரசாரத்தை கோட்டாபய ஆரம்பித்துள்ளதாக தகவல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கு புகழிடம் மறுக்கப்பட்ட பின் அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமக்கு ஏற்பட்ட தோல்வி பிம்பத்தைத் துடைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இதன் ஒரு கட்டமாக, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ‘கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ், அவர் விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் வர்த்தக அதிபர் ஒருவரால் அமைக்கப்பட்ட குழுவொன்று விஜயம் செய்து வருகிறது.

இந்த உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ச மீதான மக்களின் கருத்துக்களை அறியவும், முன்னாள் ஜனாதிபதி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிப்பதற்காகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.

“வியத்மக” அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் இந்த சமூக ஊடக ஆய்வு, தோல்வியடைந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றது.

எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை. மறுபுறம், ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், தனது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க மட்டுமே அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக, அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் கரிம உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இதில் ஒருவராவார்.

Posted in Uncategorized