புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84

Posted in Uncategorized

காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்; பாராளுமன்றில் விக்னேஸ்வரன்

“நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தியவர்கள் கூறினார்கள். மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாளன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

போர் முடிந்த பின்னரும் வருடாவருடம் படையினருக்கு கூடிய நிதிகளை பாதீட்டில் ஒதுக்கிவருவது எதற்காக? மாலைதீவோ இந்தியாவோ எமக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத்தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவா இத்தனை பெரும் தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள் என்றும் கேட்டார்.

இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?, ரூபாய் 30 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒரு சிறிய நாடான இலங்கை பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது. அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர்தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

பாதீட்டால் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை. நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்களுக்கு சமஷ்டி முறையிலான ஓர் அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.

என் பேச்சை முடிக்க முன் உறுப்பினர்களுக்கு ஒரு விடயத்தை நான் நினைவுபடுத்த வேண்டும். இந்த வாரம் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதிவிசேட தினம்.

இந்தத் தருணத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயதம் தாங்கிய சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

‘நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றன. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால், தோல்வியுற்றார். ஆனால், யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?’

இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!” அகிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய (நேற்றைய) பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்:

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் என்பவரையே நான்கு இராணுவத்தினர் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுத்த சமயம், ஏன் எடுக்கின்றாய் என கேட்டே ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமானசம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிசன்னமாகியிருக்கின்றார்.

வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பபட்டது

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

03 2 வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பபட்டதுஅதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (27.11) இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்திய பின் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை

தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே பெரும்பான்மையினரான பெண்களை அவமானப்படுத்தி விட்டு, இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவுக்கு எதிராக பெண்ணின வெறுப்பு மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளை, அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக சபையில் பிரயோகித்துள்ளார். இந்நாட்டு பெண்களை அவமானப்படுத்தும்முகமாக சபையில் சொல்லப்பட்ட இக்கருத்துகளை, பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய அமைப்பின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபிள்ளை மற்றும் எதிரணி எம்பி தலதா அதுகோரள ஆகியோர், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் சென்று கடுமையாக கண்டித்து தமது உரிமைக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மாத்தளை மாவட்ட எம்பி ரோகினி குமாரி விஜேரத்ன உரிமை கோரிக்கை எழுப்பி, தன்னையும், இந்நாட்டு பெண்களையும் நிமிர்ந்து நின்று மகிமைப்படுத்தியுள்ளார்.

அருவருக்கதக்க விதத்தில், பெண்களை அவமானப்படுத்துவதும் பின்னர் அவற்றை விளையாட்டு, கேலி, கிண்டல், அரசியல் என்ற பெயர்களில் மூடி மறைப்பதும், நமது சமூகத்தில் வழமையாக நடைபெறுகிறது. இதுவே அன்று அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி வாயில் இருந்தும் பாராளுமன்ற சபையில் வெளிப்பட்டது.

தனிப்பட்ட உரையாடல்களில் இத்தகைய கருத்துகள் கூறப்படுவதையும்கூட அங்கீகரிக்க முடியாது. ஆனால், சிலவேளைகளில் அவை தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவோரின் நட்பு நடத்தைகளாக பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கும் இன்றைய நவீன பெண்கள் முறையாக உரிய பதிலடிகளை அளிக்கின்றனர். ஆனால், இவை பகிரங்கமாக, அதுவும் நாட்டின் அதியுயர் நாடாளுமன்ற சபையில் கூறப்படும்போது, நிலைமை வரம்பு மீறுகிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

இன்று பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய பெண் எம்பி உறுப்பினர்களும், நன்னடத்தை கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களை கண்டித்திருப்பது, இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களை உலுக்கி விட்டு அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் நல்விளைவை ஏற்படுத்தி உள்ளதாவே நான் நம்புகிறேன்.

Posted in Uncategorized

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்தானந்தவினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடந்த அரசாங்கம் இறுதி வருடத்தில் 3.7 பில்லியன் ரூபா செலவிட்டிருப்பதாகவும், ஆனால் 2020ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி 1.7 பில்லியன் ரூபா மாத்திரமே செலவினங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்கு மாத்திரம் 2,000 மில்லியன் ரூபா நிதி செலவு செய்திருந்தோம். அதன் பின்னர் உணவு உற்பத்திக்கு 500 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம். 2019ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 4,000 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம்.

அதன்படி பார்க்கும்போது பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கிராம சக்தி வேலைத்திட்டம் நாடுபூராகவுமுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், இன்று அந்த வேலைத்திட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயின் அந்த வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக நீக்கப்படும்.

சிறுநீரக நோயாளர்களுக்காக கடன் வாங்காமல் நன்கொடை பெற்று பொலனறுவையில் வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை.

இதுவே இன்றைய நிலைமை. சுற்றுாடல் பாதுகாப்புக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், 5 ஆணைக்குழுக்கள் போன்றனவும் செயற்பட்டன. இவற்றுக்காகவும் நிதி செவிடப்பட்டிருந்ததது.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்றன. பண்டாரநாயக்கவுக்கு பின்னா் அரசாங்கத் தரப்பில் தவறு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு கடந்த ஜனாதிபதி ஒருவரே நடவடிக்கை எடுத்திருந்தாா் என்பதை மறந்துவிடவேண்டாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கும் தனியான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆகவே, 3.7 பில்லியன் ரூபா நிதியை அநாவசியமாக செலவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறோம்.

எங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தோம். ஆனால், அதிகாரத்தை பெற்றுக்கொண்டு முழு அதிகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கே வழங்கினார்கள்.

மக்களின் நம்பிக்கைக்காகவே 2018 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் பிரதமராக்கினாா் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது அவதானமாக இருக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். ரோஹித அபயகுணவர்தன அவரின் உரையில் கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 386 வாகனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கின்றாா். இந்த கருத்தில் எது உண்மை.

தற்போதைய ஜனாதிபதி 3 வாகனங்களையே பயன்படுத்துகின்றாா். அது சிறந்த விடயம். ஆனால், வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வரையறைகள் இருக்கின்றன. இது யாவரும் அறிந்ததே. எதுவும் தெரியாத குழந்தைகளை போன்று பொய்கூற கூடாது.

இவ்வாறான கருத்துகளை முன்வைக்கும்போது பொறுப்புடன் சிந்தித்து உரையாற்ற வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் பேசினால் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாற்ற முடியும்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான விடயத்தை தெரிவித்தது இது முதல் தடவையல்ல. ஓரிரு தடவைகளில் இதனை நிறுத்தினால் பிரச்சினையில்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கு சேறு பூசும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியாது.

நாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மயிலைபோன்று ஆடிக்கொண்டிருக்கினறாா். மஹிந்தானந்த சேற்றை கிளறிக்கொண்டிருக்கிறாா்.

தொடர்ந்து கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தாக்க வேண்டுமென்றால் நேரடியாக மோதுங்கள். எங்கள் கட்சி தலைமையின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

அவ்வாறு செய்றபட்டால் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இவ்வாறான கருத்துகள் தொடர்பில் சபாநாயகரும் கவனம் செலுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்!

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம்.

எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது.

அவ்வாறு இன்னும் நடக்கவில்லை. நடந்தால் அது நாட்டுக்கு உகந்த விடயமாக இருக்காது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும்-திருத்திய கட்டளையை வழங்கிய நீதிமன்று

“இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு” என்று குறிப்பிட்டு இன்றைய தினம் ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வுக்கு எதிரான கட்டளையை இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன்,வி.எஸ்.எஸ் தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா,க.கணேஸ்வரன் ஆகிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் ஆயராகி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றுக்கு எடுத்துரைத்தனர்

இதனடிப்படையில் குறித்த திருத்திய கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ளார்.

குறித்த கட்டளை தொடர்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவிக்கையில்,

நவம்பர் மாதம் 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் ஏழு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் மூலம் வழங்கப்பட்ட கட்டளைகள் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதி இன்று முதல் 27ம் திகதி வரை மாவீரர் நினைவுகூரல்களை நடாத்த கூடாது என்று செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் தடைக்கட்டளையை வழங்கியிருந்தது.

அந்த தடைக்கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சார்பில் இன்றைய தினம் நகர்த்தல் பாத்திரம் அழைத்து மன்றில் தோன்றி எங்களுடைய சமர்ப்பனங்களை செய்தோம். அந்த சமர்ப்பணங்களை செவிமடுத்தகௌரவ நீதிபதி, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய சின்னங்கள்,இலட்சினைகள் அல்லது அவ் இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவு படுத்தக்கூடியதாக நினைவு கூரல்களை மேற்கொள்ளாமல் இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான கட்டளையை, இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருக்கிறார்” என்றார்.