இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற மாவீரர் தினமான இன்றைய தினம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்தி முழந்தாளில் மாணவர்கள் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்துகின்றனர்.

குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினர் இராணுவ காவல்துறை புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

Posted in Uncategorized

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இலங்கை காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தொடரும் சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பயிற்சியினை மீள் பரிசீலனை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டிலிருந்து அழைப்பு விடுத்து வந்த எம்மைப்போன்றவர்களுக்கு கிடைத்த ஓர் வெற்றியாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலங்கையில் பல தசாப்தங்களாக சித்திரவதையானது குறைவடையாமல் தொடர்ந்திருக்கின்றது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தப் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்ட்கொட்லாந்தில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். 2016 இலங்கையானது பெயர் போன சித்திரவதை இடத்திற்குப் பொறுப்பாக இருந்த ஓர் காவல்துறை அதிகாரியை ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் கூட்டத்திற்கு தனது பிரதிநிதியாக அனுப்பும் துணிவைக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டதில் இலங்கை அதிகாரிகள் சித்திரவதை இடம்பெறுவதை மறுத்ததுடன் யுகேயினுடைய பயிற்சி காரணமாக நம்பகத்தன்மையையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் பயிற்சிகளுக்கு மத்தியிலும் இலங்கையில் காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் சிததிரவதை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகமானது திட்டமிட்ட மீறல்களை நிறுத்த உதவி செய்யாத ஆதரவுப் பயிற்சிகள் மற்றும் ஆளுமைகளைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு மட்டுமே தொடர்ந்தும் நிதி வழங்குவதை விடுத்து சித்திரவதைக்கான பொறுப்புக்கூரல் தொடர்பில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்”

எத்தேர்தல் இடம் பெற்றாலும் பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நாம் நிர்வாகியாக்கியுள்ளமை கவலைக்குரியது. வியத்மக உறுப்பினர்களை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. இனி வரும் காலங்களில் எத்தேர்தல் இடம் பெற்றாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது என பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு பெரும் பாதிப்புக்களை நோக்கி நகர்கிறது 51 வருட கால பழமை வாய்ந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை  50 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடியுள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை தற்போதைய காலத்தில் மாத்திரம் தோற்றம் பெற்றதல்ல 51 வருட காலமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது. ஆனால் எந்த அரசாங்கமும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு  மூடவில்லை.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் விற்கப்பட்டுள்ளதா என்று மக்கள் எண்ணும் அளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்படுவதை காணும் போது பெரும் வேதனையடைகிறேன்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நிர்வாகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமிக்க அரசாங்கத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரவில்லை. ஏனெனில் அதன் விளைவு எந்தளவிற்கு பாரதூரமானதாக அமையும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகரை அழகுப்படுத்தும் விதமான சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர் யுவதிகள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குடிவரவு,குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக வரிசையில் உள்ளார்கள் அந்தளவிற்கு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்திற்குள் மக்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. வியத்மக அமைப்பினரை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

இராஜாங்க அமைச்சுக்களை பெற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளார்கள். மக்கள் கற்றவர்களை அல்ல புத்திசாலிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் வருடம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எத்தேர்தல் இடம் பெற்றாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடையும்.

எந்த அரசாங்கத்திற்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை இனி வழங்கமாட்டார்கள் தேசிய அரசாங்கமே இனிவரும் காலங்களில் தோற்றம்பெறும் என்றார்.

அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது – மைத்திரிபால சிறிசேன

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது.

எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை!

2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையானது, கடந்த வருடத்தில் வெளிப்படும் போக்குகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் எதிர்கால மீறல்களின் கணிசமாக உயர்ந்த ஆபத்தைக் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) மார்ச் மாதம் 46/1 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, இந்தப் போக்குகள் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியதுடன், இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வலியுறுத்தியது.

பாதுகாப்புப் படைகள் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அவர்களின் கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துதல், பல தன்னிச்சையான கைதுகளுடன் அதிகரித்தன. நீதிமன்றக் கண்காணிப்பு அல்லது அடுத்த செயன்முறைக்குத் தேவையில்லாமல், தனி நபர்களை கைது செய்து மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பும் அதிகாரங்களுடன் புதிய விதிமுறைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகவும், காணாமல்போனோர் அலுவலகம் போன்ற சுயாதீன நிறுவனங்களை வழிநடத்த சர்ச்சைக்குரிய நபர்களை நியமித்ததாகவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல மனித உரிமை வழக்குகளில் பொறுப்புக்கூறலைத் தடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருப்பதாக விவரித்த காவலில் பல மரணங்கள் இருந்தன என்றும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

டொலர் இல்லாமல் இரசாயன உர இறக்குமதி சாத்தியமா? – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

டொலர் இல்லாமல் இரசாயன உர இறக்குமதி சாத்தியமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாய அமைச்சரது இன்றைய அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

இரசாயன உரங்களையும் களை நாசிகளையும் திரவ உர வகைகளையும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமான கம்பனிகளுக்கு அனுமதி வழங்குவதற்கா? இல்லை மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பில் இருந்து விடுபடுவதற்கான தந்திரமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

காரணம் நாட்டில் போதிய டொலர் இல்லாமையே பல இறக்குமதிகள் தடை செய்யப்பட்டமைக்கு மூல காரணமாகும் அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தாங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய உர இறக்குமதியை தனியாரிடம் கொடுப்பதிலும் டொலர் பிரச்சினை தான் உண்மையான காரணம் ஆனால் மக்களை ஏமாற்ற தனியாருக்கு அனுமதி கொடுப்பதாக ஒரு தந்திரோபாய நகர்வை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

தனியார் கம்பனிகள்இறக்குமதி செய்வதாக இருந்தாலும் இலங்கையில் உள்ள வங்கிகளே டொலர்களை வழங்க வேண்டும் ஆனால் வங்கிகளில் டொலர் இல்லை. இல்லாவிட்டால் ஒரு தடவை இறக்குமதி செய்த உரத்திற்கான டொலரை மீளப் பெறாமல் தனியார் கம்பனிகளாலும் மீள இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகும்.

ஏற்கனவே நாட்டின் கொழும்பு துறைமுகத்தில் நுற்றுக் கணக்கான கப்பல்கள் நாட்டில் டொலர் இல்லாமையால் சுங்கத்தால் பொருட்களை இறக்குவதற்கான அனுமதி வழங்கப்படமால் காத்திருக்கின்றன.

ஆகவே அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கவும் நாங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி விட்டோம் என்று கூறுவதற்குமாக இந்த வர்த்தமானியை கொண்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கம் உர இறக்குமதியை மேற் கொள்ள முடியாது உள்ளமைக்கு டொலர் இன்மையே காரணம். எனவே விவசாயிகளுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமா? என்றும் தெரிவித்தள்ளார்.

ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் இவ் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐ.நா.வின் 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் கூட்டமைப்பு தரப்பால் விளக்கமளிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் பிரதானியாகவும், சர்வதேச வல்லரசாகவும், இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கும் ஜேர்மனியுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எல்லைகளை மீள திறக்கும் நியூஸிலாந்து

நாட்டின் எல்லைகளை மீளத் திறக்கும் திட்டங்களை நியூஸிலாந்து வௌியிட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஆண்டிலிருந்து வௌிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வௌிநாட்டவர்கள், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து நியூஸிலாந்துக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தைச் சென்றடைந்ததிலிருந்து 7 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே கட்டுப்பாடுகளுடன் வௌிநாடுகளில் உள்ள நியூஸிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

8 அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனத்திற்கு அனுமதி

எட்டு அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பிலான குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அனுமதி வழங்கப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் உள்ளடங்குகின்றார்.

அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிற்கான செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.