பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 18 நவம்பர் 2021 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஐநா பிரேரணை சம்பந்தமாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.

பிரித்தானியாவின் தலைமையிலே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், அவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள், அதன் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. கால வரையறை யோடு கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 18 மாதங்களே உள்ளன. அதில் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் ஒருபுறம் இருக்க தமிழ் தரப்பினரால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவது பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடு எதிர்காண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள், தமிழ் மக்களும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அவலங்கள், கோரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என பிற விபயங்களும் கலந்துரையாடப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

நினைவேந்தலில் மாற்றம் விடுதலைப் போராட்ட உண்மைகளை திரிபு படுத்திவிடும் – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறுகளை மறைக்கும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டு வரும் போது தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில் அந்த வரலாற்று உண்மைகளை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தார்மீக கடமையை கொண்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு தமிழரும் மறந்து விட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அண்மையில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலும் நினைவேந்தலின் முக்கியத்துவம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழர்கள் தாம் வாழும் சம காலத்து வரலாற்று நிகழ்வுகளையே திரிபு படுத்தும் அபத்தமான காரியங்களில் இறங்கி விடக் கூடாது. காரணம் வரலாறு என்பது நிகழ்வுகள் நடந்த சம காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு ஆதாரப்படுத்தபட வேண்டும் அதுவே எதிர்காலத்தில் அதன் உண்மைத் தன்மைகளை உறுதி செய்யும். இவ்வாறான உண்மைகளை தொழில் நுட்ப முறைகளினில் மாற்றியமைக்க முடியாது.

உதாரணமாக மகாவம்சத்தில் அதன் உண்மைத் தன்மைகளை ஏற்க மறுப்பதற்கான காரணம் அந்த நூலில் இடம் பெற்ற சம்பவங்கள் கி மு 6 நூற்றாண்டில் நடந்தவை ஆனால் அதனை எழுதிய நூலாசிரியர் கி பி 6 நூற்றாண்டில் வாழ்ந்தவர் இந்த வேறுபாட்டுடன் குறிப்பிட்ட பல விடையங்களுக்கு ஆதாரம் இல்லை ஆகவே இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உண்மைகளை சம காலத்திலேயே மாற்றியமைத்தால் இனத்தின் வரலாற்று இருப்புக்கு பாரிய பின்னடைவாக அமைவது மாத்திரமல்ல விடுதலைப் போராட்ட உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்.

சிங்கள் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள் நினைவேந்தல்களை செய்யும் போது பயங்கரவாத தடைச் சட்டம் பாயும் என்பதற்காக வரலாற்று உண்மைகளை மாற்றி நினைவேந்தல் செய்வது ஆரோக்கியமான பணி அல்ல.

1948 ஆண்டில் இருந்து இன்றுவரை தொடரும் அடக்குமுறைகள் அழிவுகள் தியாக செயற்பாடுகள் யாவும் திரிபு படுத்தப்படாமல் தடைகளுக்கு மத்தியில் அனுஸ்டித்து அதன் உண்மைகளை இளைய தலைமுறைக்கும் உலகிக்கும் சொல்ல வேண்டும். தடைகள் என்பது தமிழ் மக்களுக்கு புதிய விடையம் இல்லை.

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களும் இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் இன ஒற்றுமைக்கும் தமிழன் என்ற அடையாளத்துடன் பணியாற்றியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தற்போது வடக்கு கிழக்கு ஆயர்களின் ஒன்றியம் எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். யுத்தகாலத்திலும் அதற்கு பின்னதான மக்களின் புனர் வாழ்விலும் ஆயர்களது பணியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது அவை மிக அளப்பரிய பணி.

தமிழர்கள் ஆகிய நாம் எங்களுக்குள் முரண்படும் நிலையை தோற்றுவிக்காமல் வார்த்தைகளால் பொது வெளியில் விமர்சிக்காது ஒற்றுமையாக பயணிப்போம்.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , நவம்பர் 27மாவீரர் நாள் உள்ளிட்ட அனைத்து நினைவேந்தல்களையும் தொடர்ந்து அதே காலப்பகுதியில் நடாத்தி சத்திய வேள்வியில் ஆகுதியாகிய அத்தனை தியாகிகள் மக்களினதும் வரலாறுகளையும் பாதுகாத்திடுவோம்.

பாரபட்சம் நீடித்தால் தனியான நகரசபைக்காக போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

புதன்கிழமை (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரசபையினால் தடுத்து நிறுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. தனிப்பட்டவர்களுடன் கொண்ட கோபத்தின் காரணமாக கல்முனைக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளரினால் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் உள்ள பொதுமயான சுற்றுமதில் அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் அதற்கான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுவரும் சூழ்நிலையில் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை முதல்வர் மற்றும் ஆணையாளர் அதற்கான அனுமதிகளை வழங்காமல் தமக்கு சாதகமானவர்களின் அரசியல் இருப்புக்காக இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அரச அதிகாரியான ஆணையாளர் அரசியல்வாதியை போன்று செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை விரும்பாதவர்களுக்கு கல்முனை முதல்வர் சாதகமாக செயற்படுகிறார்.

அது மட்டுமின்றி மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் பாண்டிருப்பு பிரதேசத்தில் இந்த வார ஆரம்பத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியில் கல்முனை மாநகர சுகாதார ஊழியர்களும், இயந்திரமும் வேலை செய்து கொண்டிருந்த போது கல்முனை பொலிஸில் கடமையாற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும், அவருடன் வந்த இன்னும் சில பொலிஸாரும் மதுபோதையில் தடுமாறியவர்களாக வாக்குவாதப்பட்டு அந்த ஊழியர்களை பொய்யான வழக்கை பதிவுசெய்து கைதுசெய்வேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டார்கள். அப்போது அந்த வழியால் வந்த நான் இது தொடர்பில் தலையிட்டு நியாயம் கேட்டேன். இன்றுவரை இதுதொடர்பில் கல்முனை முதல்வரோ அல்லது அவருடன் இணைந்திருப்பவர்களோ, மாநகர நிர்வாகிகளோ அந்த சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன்வராமல் மௌனியாக இருக்கிறார்கள். மட்டுமின்றி அந்த அப்பாவி சுகாதார ஊழியர்களையும் சிலர் அதிகாரத்தொனியில் மிரட்டுகிறார்கள். இது தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையுற்றுள்ளோம்.

பொதுமயான சுற்றுமதில் அமைக்கும் பணிகளை கிராம அபிவிருத்தி சங்கம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு ஆரம்பித்துள்ள போது மாநகர சபையினால் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வில் நான் கேள்வியெழுப்பினேன். அப்போது முதல்வர் அவரது ஒலிவாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இந்த நிலை நீடித்தால் பிரதேச செயலக போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் எதிர்காலத்தில் எங்களுக்கான தனியான நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என்றும் மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால்தான் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமானச் சேவையும் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடையுத்தரவு

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா (கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்), சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காணி அளவிட வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் – ஜே150 கிராம சேவையாளர் பிரிவில், தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள்,  இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் போது, காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

Posted in Uncategorized

பதவியிலிருந்து ஞானசாரரை தூக்குங்கள் – ரவூப் ஹக்கீம்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
வலியுறுத்தினார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16)
விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது என்றும் அவர்
கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை
அரசாங்கம் தடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை
உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது
போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் எனவும்
தெரிவித்தார்.

உரத் தடையின் பிரதிபலனை பெரும்போகத்துக்குப் பின்னர் பார்க்க முடியும்.
நாட்டில் பாரிய பெரும் பஞ்சமொன்றுக்கு நாட்டு மக்களை அழைத்து செல்லும்
செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நாட்டில்
இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்குவை தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நெடுங்கேணியுடன் அநுராதபுரத்தின் 3 கிராம சேவை பிரிவுகளை இணைக்க முன்மொழிவு

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு, மாவட்டச் செயலாளர், முன்மொழிவொன்றை, எல்லை நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஓர் இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி, இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துகள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் எதையும் அறியாமல், வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக எல்லை நிர்ணயக் குழுவுக்கு அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு, எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

உயிர்தத ஞாயிறு தாக்குதல் – மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல முறை ஒத்தி வைக்கப்பட்ட குறித்து மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ்.துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் நீதியரசர்கள் குழாமின் உறுப்பினர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குண்டுத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்க்ளின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.