அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்றும் 8 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவிடம் இன்று முற்பகல் முதல் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவிடம் 7 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் தடுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதான நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு  இன்று (திங்கட்கிழமை) தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது 30 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 194.470 மின்லியன் பெறுமதியான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியதால் ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் 2 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

23 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை

இருபத்திமூன்று இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன், இன்று, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு, இன்று (15), பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இந்திய மீனவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பின்வரும் தகவல்களை தெரிவித்தனர். அதாவது, இருபத்தி மூன்று பேரும், தாங்கள் வேண்டுமென்று, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை எனவும் அவர்களின்  இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியதன் காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் படகு வந்துவிட்டதாகவும் இதனால் தம்மை மன்னித்து விடுதலை செய்யுமாறும்  கோரினர்.

இதனை ஏற்றுக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை, இந்திய மீனவர்களின் இரண்டு டோலர்  படகு,  இழுவைமாடி, தொலைத்தொடர்பு சாதனம், எக்கோ சாதனம், ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், 23 பேருக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இனப்பலமே ஆட்சியுரிமைக்கான அத்திவாரம் – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

இனப்பலம் தான் எமது தேசத்தையும்  மக்களையும்  பாதுகாத்து ஆட்சியுரிமையை வழங்குவதற்கான அத்திவாரமாக இருக்கக்கூடும் என்று, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக, வவுனியா வடக்கில், இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  தமிழர்களுடைய பாரம்பரிய தேசம் கடந்த 70 ஆண்டுகளாகவும், இப்போதைய ஆட்சியினாலும், சிங்கள குடியேற்றங்களாலும், ஆக்கிரமிப்புக்களினாலும்  மாற்றியமைக்கப்படுகிறது என்றார்.

தமிழர்களுடைய பெரும்பான்மை இனப்பிரதிநிதித்துவம், இனப்பரம்பல் சீர்குலைக்கப்பட்டு, அவர்களுடைய இன அடையாளம் அழிக்கப்படும் நடவடிக்கை இப்போதய காலப் பகுதியில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், அவர் சாடினார்.

தமிழ் மக்களுடைய தேசம் , கலாச்சாரம், மதம் எல்லாமே பௌத்த சிங்கள மயமாக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழ் மக்களை அழிக்கின்ற தமிழ் தேசத்தை அழித்து விடுகின்ற நடவடிக்கையை இந்த ஆட்சியும் செய்து வருகிறது என்றார்.

அதனை விட, தமிழ் பிரதேசங்களோடு அயலில் இருக்கின்ற சிங்கள கிராமங்களை இணைப்பதன் மூலம், தமிழர்களுடைய பெரும்பான்மையை அழித்து, சீர்குலைத்து “தமிழ் இனம்” என்கிற அந்தப் பதத்தை அல்லது  இனப் பரம்பலையே இல்லாமல் செய்கிற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதன எனவும், அவர் சாடினார்.

“கோட்டபாய ஆட்சியில், தமிழர்களுடைய தேசம் சிங்கள மயமாக்கப்பட்டு, பௌத்த தேசமாக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியதுடன், தமிழின அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்.

“எமது ஆட்சியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். சொந்த மண்ணிலே,  சொந்த கிராமத்திலே, சொந்த தேசத்திலே தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற உரிமைக்காக தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கு முழுவதும்  இவ்வாறான போராட்டங்களை 70 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கும் எல்லைக் கிராமமாக இருக்கின்ற வவுனியா ,- நெடுங்கேணி பிரதேசத்தில் ஒரு போராட்டத்தை இப்பிரதேச மக்களும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த மக்களும் ஒன்றுகூடி அரசுக்கு தமது வேண்டுகோளை விடுக்கிறார்கள்.

“சிங்கள குடியேற்றங்களை மீளப்பெற வேண்டும் , சிங்கள குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். தமிழர்களுடைய பிரதேசத்தையும் அவர்களுடைய இனப்பலத்தையும் நிரூபிக்க வேண்டும்.அந்த இனப்பலம்தான் எமது தேசத்தையும்  மக்களையும்  பாதுகாக்க கூடிய ஆட்சியுரிமை வழங்க அத்திவாரமாக இருக்கக்கூடும்” எனவும், மாவை கூறினார்

“அத்துடன், இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை மேலும் மேலும் அதிகரிக்கின்ற நடவடிக்கையை  எடுத்து வருகிறது. அரசாங்க ஊழியர்களாக இருப்பவர்களுக்கு சம்பளம் போதாமல் இருக்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உரம் வழங்கப்படுவதில்லை. அவர்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்ய முடியவில்லை.

“அதேபோல் கடல் தொழில்புரியும் மீனவர்கள் மிகச் செல்வச்செழிப்புடன் , வளமாக வாழ்ந்தவர்கள் அவர்களுடைய மீன் வளம் அழிக்கப்படுகிறது.
அவர்கள் அன்றாட வாழ்க்கையையே வாழமுடியாமல் அவர்களது தொழிலை செய்யமுடியாமல் வறுமைக்கோட்டின் கீழ் பசி பட்டினியோடு வாழ்ந்து சாவை நெருங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது வரவு – செலவுத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் இந்த விலைவாசி மேலும் மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்தான் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படுகிறது. இந்த வரவு – செலவுத் திட்டத்தினால் எமது மக்களுடைய பிரச்சினைகள் நெருக்கடிகள், விலைவாசி உயர்வு போன்றவை எந்த வகையிலும் தீர்க்கப்பட முடியாது என்பதை மிகத் தெளிவாக சொல்லி கொள்ள விரும்புகிறோம்.

“ஆகவே, எமது பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எமது அடையாளம், உரிமை என்பன நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்துகின்றோம்” என்றார்.

Posted in Uncategorized

வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் நீண்ட தூர ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் (16 மற்றும் 17) ஆறு நீண்ட தூர ரயில்கள் வடக்கு மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாளைய (16) ரயில் அட்டவணை 

● கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து காலை 5.45க்கு புறப்படும்)

● காங்கேசன்துறை – கல்கிசை கடுகதி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து மதியம் 13.15க்கு புறப்படும்)

● கல்கிசை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.35க்கு புறப்படும்)

● காங்கேசன்துறை – கல்கிசை யாழ்தேவி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.00க்கு புறப்படும்)

நாளை மறுதினத்துக்கான (17) ரயில் அட்டவணை

●  கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை (கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் 11.50)

● காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையேயான ரயில் (காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 புறப்படும்)

Posted in Uncategorized

மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

Posted in Uncategorized

ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விடுவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

Posted in Uncategorized

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையிலான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார்.

கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வைத்தியர் அசேல குணவர்தன இதனூடாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய,  * க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புகளுக்காக அந்த வகுப்புகள் நடைபெறும் இடத்தின் கொள்ளளவில் 50% வரை அனுமதிக்கப்படுகிறது.

* கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடையையும் மீறி வெகுஜனப் போராட்டம் நடக்கும்

பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி,
நாளை செவ்வாய்கிழமை (16) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை
முன்னெடுக்க உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாக
இந்த போராட்டம் இருக்கும் என்றும் அவர்கள்  தெரிவித்தனர்.

தடையை மீறி செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை தமது
கட்சி முன்னெடுக்கும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

நாளைய போராட்டத்தை நடத்தும் திட்டத்தை நாங்கள் அறிவித்ததையடுத்து, வெகுஜன
போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டது என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிச்சயமாகக் கடைபிடித்து
எங்கள் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பேணுமாறும்
எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்  என்று மத்தும பண்டார
தெரிவித்தார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதற்கு ஹைட் பார்க் திடல்
பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை கொழும்பு மாநகர சபை
திரும்பப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம்
சுமத்தியுள்ளார்.

கொழும்பு நகருக்குள் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை ஒன்று சேர்ப்பதற்காக
முன்னர் எங்களுக்கு வழங்கப்பட்ட ஹைட் பார்க் மைதானத்தை மநகர சபையின் சுகாதார
அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.