முத்துராஜவெல வர்த்தமானி: ரிட் மனுத் தாக்கல் செய்த கர்தினால்

முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதிக்கு சொந்தமான 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அவர்களது வசிப்பிடமும் கடுமையாக சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக மனுதாரரான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வலுவிழக்கும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் – வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“கூட்டணி அமைத்துள்ள அரசாங்கத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இது இயல்பான ஒன்று. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் இறுதியில் அரசாங்கமே நிலைபெறுகின்றது.

ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது நாட்டில் சக்தியுள்ளது. மக்கள் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அந்த விசுவாசத்தையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் தியாகம், அர்ப்பணிப்பில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் அரசாங்கத்தை அமைப்பதைவிட அமைத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது கடினமானது.

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இலகுவானது. அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பது இயல்பானது. அதனை தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினையில்லாத அரசாங்கம் இந்த நாட்டில் இருந்துள்ளதா? எனவே இதனைக் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

எல்லைமீறும் சர்வதேசம்! இருண்ட யுகத்தை நோக்கி நகரும் இலங்கை – தேரர் எச்சரிக்கை

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு என்பது எல்லைகடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்  தெரிவித்துள்ளார்.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பல்லின சமூகத்தினர் வாழ்கிறார்கள். இருப்பினும் இன நல்லிணக்கம் இதுவரையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளினால் ஒரு தரப்பினர் பயன்பெற்றுக் கொண்டதனை பல்வேறு சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லை கடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கில் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அத்துடன் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மத தலைவர்களுக்கு உண்டு மத தலைவர்கள். சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு மத கொள்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பா மீண்டும் கோவிட் தொற்றின் கேந்திரமாக மாறலாம் : உலக சுகாதார அமைப்பு

ரோப்பா மீண்டும் கோவிட் தொற்று நோயின் கேந்திர நிலையமாக மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் பயணக்கட்டுப்பாடுகள் துரிதமாக தளர்ப்பட்டுள்ளமை மற்றும் போதுமானளவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமை என்பன இதற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையல், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மேலும் 5 லட்சம் கோவிட் மரணங்கள் ஏற்படக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

53 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல் கடிதத்துடன் ஜனாதிபதி சந்திக்க சென்றுள்ள அலி சப்ரி?

நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சு பதவி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகும் கடிதத்தை தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவர் அந்த கடிதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை எதிர்த்து அலி சப்ரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகளின் தலைவர் தந்த வாக்குறுதி: -காலம் கடந்து ஹக்கீம் எம்.பி வெளியிட்ட தகவல்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெரு, முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

. இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சந்தித்தேன். நோர்வே ஏற்பாட்டாளர்கள் மூலமாக எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு அவரை சந்திப்பதற்காக அறிவிப்பு வந்திருந்தது.

விசேட வானூர்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு எனது தலைமையில் கிளிநொச்சியில் அவரை சந்திப்பதற்காகச் சென்றோம். புதுக்குடியிருப்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஒருங்கு செய்யப்பட்டிருந்தன.

ஏறத்தாழ 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நாங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நேருக்கு நேர் அமர்ந்து தமிழ், முஸ்லிம் விவகாரம் தொடர்பில் கதைத்திருந்தோம். அப்போது எங்களுடன் அன்டன் பாலசிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.

அவர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” எனக் கூறியிருந்தார். அதை நாங்கள் பேசுமளவுக்கு அவர்கள் வைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் உணர்வுபூர்வமாக அதனைக் கூறினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தூதுக்குழுவில் 6 தடவைகள் வெளிநாடுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் நானும் கலந்துக் கொண்டவன் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் நடந்த விடயத்தை பற்றி பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

அதனை எவ்வாறாவது மீள சரி செய்துவிட வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களிடம் பல விடயங்களை பேசினோம். இதன்போது, நான் மிக முக்கியமாக ஒரு விடயத்தை விடுதலைப் புலிகளின் தலைவரோடு பேசினேன்.

அந்த நேரத்தில் எங்களுக்கு இருந்த பிரச்சினைகளுள் ஒன்று தான் முழு தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பிறகு, எல்லா இடங்களிலும் சாரிசரியாக மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுகளை மேற்கொண்டு புலிகளை மக்கள் வரவேற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருபுறம் பீதியும், மறுபுறம் அச்சமும், விடுதலையும் என எல்லாம் கலந்துவிட்ட மாதிரியான ஒரு நிலைவரம் நிலவிய காலப்பகுதியில் பல இடங்களில் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டிருந்தது.
புலிகளின் ஊடுருவலை தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் எடுக்கும் நிலைமை காணப்பட்டது.

அரசாங்கத்தின் மூலம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு சர்வதேசத்திடமும் அதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் கூட, இவ்வாறு வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமை கடுமையாகத் தளைத்தோங்கி இருந்தது.

மேற்படி சம்பவத்தையும் ஓர் அம்சமாக எடுத்து தலைவர் பிரபாகரனிடம் பேசி இருந்தேன். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் இப்போது தான் கிழக்கில் அவர்கள் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களிடத்தில் வரி அறவிடுவது நியாயமற்றது என்பதை முறையிட்டோம்.

அதற்கு அவர், அருகிலிருந்த அன்டன் பாலசிங்கத்தோடு கதைத்துவிட்டுச் சொன்னார், “தமிழ் வர்த்தகர்களிடமும் இவ்வாறு வரி வசூலிக்கவே செய்கின்றோம். ஆகவே தான் முஸ்லிம்களிடத்திலும் அதனை கேட்கின்றோம்.

இத்தனை போராளிகள் எங்களிடத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய செலவுகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்காகவே இத்தகைய வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களிடத்தில் வரி விதிக்காமல் போனால் தமிழர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவர்களிடத்திலும் வரி வசூலிக்கின்றோம்” என்றார்.

அதற்கு நான் அவரிடத்தில் சொன்னேன் “முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களின் சார்பில் எதுவும் செய்துவிடவில்லை. போதாக்குறைக்கு இருந்த முஸ்லிம்களையும் விரட்டிவிட்டீர்கள் என்பதே பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்களின் மனப்பதிவாகவுள்ளது.

மீண்டும் அவர்கள் இக்கட்டுக்களுக்கு மத்தியில் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களிடத்தில் கோரப்படும் வரிப் பணத்தை ஒரு கப்பம் மாதிரியாகவே பார்க்கின்றார்கள்” என்றேன்.

அதற்கு அவர் உடனே “ நீங்கள் கூறுவது சரி. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாளையிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களிடத்தில் நாங்கள் வரி அறவிட மாட்டோம். அதனை நீங்கள் என்னுடைய வாக்குறுதியாக எடுக்கலாம்” என உறுதியளித்தார்” என்றார்.

Posted in Uncategorized

ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் இம்மாதம் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏனைய துறைகளின் தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாக 2022 வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் ‘சுபோதினி அறிக்கை’ மூலம் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவால் முன்மொழியப்பட்ட தொகையை செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சுக்கு எதிரே இன்று (05) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அனைத்துப் பல்கலைக்கழக வல்லுநர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

‘சுபோதினி அறிக்கை’ பரிந்துரைத்தபடி, நாட்டின் தலைவர்கள் காலதாமதமான தொகையை ஒரே கட்டணத்தில் செலுத்துவதை உறுதிசெய்ய மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், பணம் வீணாகப் போவதில்லை என்றார்.

Posted in Uncategorized

மதிய உணவு வேளை போராட்டத்துக்கு மனோ அழைப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள், மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஜ.ம.மு இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோரை, இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகளான வண. யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர், இன்று(04) சந்தித்து உரையாடினார்கள்.

அதன்போது இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பிரதிநிதிகளுக்கு, இன்று தோட்ட தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் விரிவாக எடுத்து கூறினர்.

எதிர்காலத்தில்  தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளையும் பொது தேசிய தொழிற்சங்க வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என இரு தரப்பினரும் இணங்கினர்.

Posted in Uncategorized

பண்டோரா ஆவணக் கசிவில் இடம்பிடித்திருந்த திருக்குமார் நடேசன்: மற்றொரு பட்டியலிலும் இடம்பிடித்தார்

கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முதல் 20 பங்குதாரர்கள் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இடம்பிடித்துள்ளார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கசிந்த பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்ட நடேசன், 2021, செப்டம்பர் இறுதியில் காா்கில்ஸின் கிட்டத்தட்ட 600, 000 பங்குகளை அல்லது 0.23 சதவீத  பங்குகளை வைத்திருந்தார்.

அத்துடன் அதன் 18வது பெரிய பங்குதாரராகவும் இருந்தாா்.

புலனாய்வுச் செய்தியாளா்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட பண்டோரா ஆவணங்களில், நடேசன் மற்றும் நிருபமா ஆகியோர் பல்வேறு வெளிநாட்டுக் கணக்குகள்  மற்றும்  சொத்துக்கள் வைத்திருப்பதற்காக பெயரிடப்பட்டிருந்தனா்.

இதனையடுத்து பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவிற்கு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தாா்.

எனினும் தாமும் தமது மனைவியும் முற்றிலும் நிரபராதி என்றும் எந்தத் தவறும் செய்யாதவா்கள் என்றும் நடேசன் , ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தொிவித்திருந்தாா்.

இதற்கிடையில், கார்கில்ஸின் முதல் 20 பங்குதாரர்களில் மற்றொரு தமிழரும் இணைந்துள்ளாா்.

A. I. டொமினிக் என்டோயின் இந்திரஜித்   என்ற அவா், நியூயோா்க்கில் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவராவார்.

2021 செப்டம்பர் இறுதியில், அவா்,  கார்கில்ஸின் 1.96 மில்லியன் பங்குகளை கொண்டிருந்தார்.

உலகத் தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறோம்: ஸ்கொட்லாந்து மாநாட்டில் தமிழ் மாணவியின் துணிச்சல் பேச்சு

இன்றைய இளம் தலைமுறையினர் உலக தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் தமிழக மாணவி ஒருவர் உரையாற்றியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்ற மாநாடு இடம்பெற்றுவருகிறது. கால நிலை மாற்ற மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமா சங்கர் என்ற மாணவியும் கலந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் அழைப்பின் பெயரில் காலநிலை மாற்ற மாநாட்டில் வினிஷா உமாசங்கர் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதன்போது குறித்த மாணவி உரையாற்றியதாவது, நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்படத் தொடங்க வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உலக தலைவர்கள் ஆதரிக்க வேண்டும்.

பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவை. எனவே எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன்.

எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் வழி நடத்துவோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று. வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற தவறிய தலைவர்கள் மீது எனது தலைமுறையினரில் பலர் கோபமாகவும், விரக்தியாகவும் உள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் கோபப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.

நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல. நான் பூமியில் இருந்து வந்த சிறுமி. நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். மிக முக்கியமாக நான் ஒரு நம்பிக்கையாளர் என்றார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு எர்த்ஷாட் என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.