பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம்

ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பலநாட்டு அரச தலைவர்களும் வருகைதந்திருக்கிறார்கள்.

பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம் அவர்களில் ஒருவராக சிறீலங்கா அரச தலைவரான கோத்தபாய ராஜபக்சாவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் பல நாடுகளிலும் இருந்து ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம் இந்நிலையில், ‘மிக கண்ணியமான போராட்டக்காரர்களை கடந்து செல்ல நேர்ந்தது. இலங்கை ஜனாதிபதி Dunblane Hydro ஹோட்டலில் இருக்கிறார், அவரது மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர்.

அவர்கள் கோஷமிடுவதைக் கண்டு நாய் அஞ்சியதால், கோஷமிடுவதை நிறுத்திய அவர்கள் அந்நாய் நடந்து செல்ல இடமளித்தனர்’. என குறித்த போராட்டம் தொடர்பாக அந்நாட்டு பொது மகன் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன? – ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வேறு சட்டவாக்க அலகுகள் நாட்டுக்குள் இருக்க முடியாது என்பதே அது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரவந அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை நோக்கம் ஒரு நாட்டுக்குள்ளே ஒரு சட்டவாக்க முறைமை மாத்திரமே இருக்க முடியும். வேறு சட்டவாக்க அதிகாரங்கள் கொண்ட அலகுகள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவது. இதன் விளைவாக தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்ற சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி, கூட்டு சுயாட்சி, ஒரு நாடு இரு தேசம் அல்லது மாகாண சபைகள் எவையும் இருக்க முடியாது என்ற செய்தியை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தமிழ் தேசியம் பேசும் சில கட்சிகள் அரசு முன்வைக்க இருக்கும் புதிய அரசியல் யாப்பில் அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ் மக்களுக்கு எதிர்வு கூறுகிறார்கள். இதை தடுப்பதற்கான அல்லது குறைந்தபட்சம் எதிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.

அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்து விட்டாயிற்று. அரசோ மரியாதைக்கு தன்னும் அழைத்து பேசுவதாக இல்லை. பல கடிதங்கள், கோரிக்கைகள் அனுப்பியும் அரசாங்கம் செவி கொடுக்கவில்லை. மாறாக புலம்பெயர் அமைப்புகளோடு பேச்சுக்கு தயார் என்று அறிவித்திருக்கிறது.

சர்வதேச ஆதரவு மூலம் அல்லது பூகோள நகர்வுகளின் மூலம் அரசியல் தீர்வு வந்து தமிழ் மக்கள் மடியில் விழுந்துவிடும் என்று கனவில் மிதப்பதாக இருக்கிறது. பூகோள அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாகவும் இல்லை.
எந்த சர்வதேச நகர்வுகளும் இந்தியாவை தாண்டி இலங்கையில் நடைபெற முடியாது என்பது பட்டறிந்த யதார்த்தம். எல்லா சர்வதேச நாடுகளும் தமிழ் தரப்பை அழைத்து மதிப்பளித்து எமது பிரச்சனைகளை செவிமடுத்தாலும் இறுதியில் இந்தியாவையே கருத்து கேட்பார்கள்.

இந்தியா தமிழர் தரப்பின் அரசியல் தீர்வு விடயங்கள் சார்பாக இலங்கை அரசை வலியுறுத்துவதாக இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாத்திரமே தலையீடு செய்ய முடியும் என கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் வருகை தந்த வெளி விவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் அதைத் தெளிவுபட கூறிவிட்டார்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு மிகத் தந்திரமாக தன்னுடைய காய்களை நகர்த்தி வருகிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடாக இருக்கும் மாகாணசபை தேர்தலை வெற்றி கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் முனைப்பு காட்டுகிறார்களே தவிர அதில் காத்திரமான அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான எந்த நடைமுறையையும் செயல்படுத்தவில்லை.

இதேநேரம் அரசு ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை வகுப்பு என்பது நாட்டில் வேறு எங்கும் சட்டவாக்க அதிகாரம் உள்ள அலகுகள் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருக்க கூடாது என்று உறுதி பூண்டுள்ளது. இதனடிப்படையில் சிங்களப் பேரினவாதம் தவிர்ந்த மற்ற இனங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு சொந்தமானவர்கள் அல்ல, பௌத்த பேரினவாதம் சொல்வதைக் கேட்டு அடங்கி வாழ வேண்டும் என்ற கொள்கையோடு செயற்படுகின்ற ஞானசார தேரரை இந்த குழுவிற்கு தலைமையாக நியமித்திருக்கிறது. புதிய அரசியல் சாசனத்தை ஜனவரி 2022 இற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராகி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இந்த சாசனம் நிறைவேற்றப்படும். அதேநேரம் பொதுசன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வேளையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பிரச்சாரத்தை சிங்கள மக்களிடம் வைத்து இனவாதத்தைக் கக்கி வாக்கெடுப்பை வெற்றிகொள்ள அரசு முயற்சி செய்கிறது. அதில் வெற்றியும் அடையும்.

அந்த நிலையில் தமிழர் தரப்பால் முன்வைத்த அரசியல் தீர்வை உள்வாங்க வைப்பதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம். புதிய அரசியல் யாப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்போது 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் ஒட்டுமொத்தமாக காலாவதியாகிவிடும். அதற்குப்பின் இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாத சூழ்நிலை ஏற்படும். தமிழினமும் புதிய தேர்தல் முறை, திட்டமிட்ட காணி அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் அரசியல் பலத்தை இழக்க நேரிடும். இந்த அபாய கட்டத்தில் இன்று நாங்கள் உள்ளதை புரிந்து கொள்ளாத பலர் தாங்கள் கொள்கைவாதிகள் என மக்கள் முன்பு நின்று வீராப்பு பேசுவதை அறிக்கைகள் மூலம் காணக்கிடைக்கிறது.

அரசின் தமிழினத்திற்கு எதிரான பெளத்த பேரினவாத புதிய அரசியல் யாப்பு, திட்டமிட்ட காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றத்தின் மூலம் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது, புதிய தேர்தல் முறைமையின் ஊடாக பிரதிநிதித்துவத்தை குறைப்பது, எல்லை மீள் நிர்ணயத்தின் மூலம் எல்லைகளை மாற்றுவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி எதிர்கால அரசியல் கோரிக்கைகளை ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இதை தடுத்து நிறுத்த இந்தியாவின் ஆதரவை கோரும் எமது அரசியல் நகர்வினை விமர்சிக்க முற்படுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசின் நிகழ்ச்சி நிரலை அங்கீகரிப்பதாக அமையும்.

இதை விடுத்து அரசியல் பலமும் ஒற்றுமையும் இல்லாத சூழ்நிலையில் எமது இனத்திற்கு சர்வதேச ஆதரவு தான் ஒரே வழியாக உள்ளது. ஒற்றை ஆட்சிக்கு உட்படாத கூட்டாட்சி முறையான அரசியல் தீர்வே எமது நிலைப்பாடு. அது சாத்தியமாகும் வரையில் தமிழரின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவை கோருவதன் மூலமே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் கீழ் தமிழினம் ஒட்டுமொத்த அரசியல் உரிமையையும் இழப்பதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

ஆகவே தமிழர் தரப்பு வீணான கொள்கை வீராப்புக்களை முன்வைத்து கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களைத் தவற விட்டது போல இப்பொழுது எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில், இருப்பதையும் இழந்து விடாது இருக்க ஒன்றுபட்டு ஒருமித்த நிலையில் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியாவை கோருவதன் மூலம் தான் அரசின் போக்கை கட்டுப்படுத்தவும் எதிர்கால அரசியல் தீர்வை எட்டவும் வழிவகுக்கும். மேலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தியாவை 13 இன் அடிப்படையில் கோருவதன் மூலம் இந்தியாவின் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாட்டையும் பங்களிப்பை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமையும்.

எந்தவொரு குடிமகனும் பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது – ஞானசார தேரர்

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஓர் அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்புக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும், இனம், மதம், சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார்.

“ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”இன் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு முதன்முறையாகத் தெளிவுபடுத்தும் வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய கலகொடஅத்தே ஞானசார தேரர், எந்த இனம், மதம் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, அவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலிடத்தில் நாட்டை முதன்மைப்படுத்திச் செயற்படுத்துவதாயின், அத்தகைய ஒரு நாட்டின் சட்டக் கட்டமைப்புக்கான அனைத்துக் கருத்துகளையும் செவிமடுக்க இந்தச் செயலணி தயாராக இருக்கின்றது என்றார்.

அத்துடன், இந்தப் பிரச்சினைகள் தொடர்பான பரந்துபட்ட தெளிவும் ஆழ்ந்த ஆய்வும், இந்த ஜனாதிபதிச் செயலணிக்கு உள்ளதென்றும், தேரர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு ஏற்ற ஒரு சட்டத்தையும் நாட்டின் எதிர்காலச் சந்ததியை அடுத்த நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும், ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே நமது பொறுப்பாகவுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“குறுகிய பிளவுகள் இல்லாத ஒன்றுபட்ட தேசமாக, பரஸ்பரம் கலாசாரம், சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவையாகவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றோ அல்லது பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற அடிப்படையிலோ பிளவுபடாது, அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சட்டத்தை இந்நாட்டுக்குள் கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதே எமது பொறுப்பாகவுள்ளது.

இனம், மதம், மாகாண அடிப்படையிலான பிளவுகள் காரணமாக, இந்நாட்டின் இளையோர் சமுதாயமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தச் செயற்பாடுகளின் போது இளைஞர் சமுதாயத்துக்கு விசேட இடமொன்று வழங்கப்படும் என்று தெரிவித்த தேரர், பல்கலைக்கழகம், உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இளைஞர், யுவதிகளும், தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை இந்தச் செயலணிக்கு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இது தொடர்பில் இந்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் தங்களுடைய கருத்துகளைப் பரிமாற்றிக்கொள்ள தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த ஞானசார தேரர், மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லாமல் வரும் அனைவருக்கும் கலந்துரையாடலுக்கான கதவுகள் திறந்திருக்கும் என்றார்.

இந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னர், செயலணியின் கருத்துக்களும் பரிந்துரைகளும், உரிய காலத்துக்குள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், தேரர் தெரிவித்தார்.

இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, “ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அதன் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன, தவிர சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை என்றும் அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேடப்படும் குற்றவாளி கோட்டாபய!! கிளாஸ்கோவை சுற்றிவரும் மர்ம வாகனம்!

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ‘சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தேடப்படும் குற்றவாளி’ என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட மர்ம வாகனங்கள் கிளாஸ்கோ நகரம் முழுவதும் நடமாடித்திரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு போராட்டங்களின் அங்கமாக இந்த ஒளியூர்தி வழியான போராட்டமும் இருக்கலாம் என்று கிளாஸ்கோ வாழ் தமிழ் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.

கோட்டாபயவிற்கு எதிரான புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் அவர் தங்கியிருக்கும் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதால் இந்த மாநாட்டில் அவர் பங்கெடுக்க கூடாதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியும் போர்க்குற்றங்களுக்கு அவரை பொறுப்புக்கூற வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் அழுத்தம் வகையிலும் நாளை மாநாடு இடம்பெறும் நிகழ்வு வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ் மக்கள் இன்று லண்டனில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாலை புறப்பட்டனர். பிரான்ஸ் உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்தும் மக்கள் கிளாஸ்கோவுக்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கிளாஸ்கோவில் தங்கியுள்ள சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக ஸ்கொட்லாந்து தமிழர்கள் சமூகவலைத்தள பதிவுகள் ஊடாக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ மற்றும் ஐ.நா மாநாடு இடம்பெறவுள்ள கிளாஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் கோட்டாபயவுக்கு எதிராக பிரமாண்ட அளவில் சீரொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO வழங்கும் இந்த மானியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையில் உள்ள World Vision மூலம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வளங்கள் Covid-19 மற்றும் இலங்கையில் அதன் சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை நிறைவு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய உதவித்தொகையானது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும் என்றும் இது இலங்கையில் உலக சுகாதார அமைப்புடனான தற்போதைய பங்காளித்துவத்தை நிறைவு செய்கிறது என்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி கூறியுள்ளார்.

Posted in Uncategorized

சமரசத்திற்கு தயாராகும் பிரித்தானியா!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான மீன்பிடி தொடர்பான மோதல் அதிகரித்து வருவதை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இத்தாலியில் இடம்பெற்றுவரும் ஜி 20 மாநாட்டின் பின்னணியில் ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் தடுத்து வைத்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டு, இருதரப்பும் ஏட்டிக்குப்போட்டியான நகர்வுகளை எடுக்கத்தயாரகும் நிலையில் பொறிஸ் ஜோன்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலக் கால்வாயை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட பிரித்தானிய படகினை பிரான்ஸ் தடுத்து வைத்த நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கொந்தளிப்பு ஏற்பட்டு மீன்பிடி தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

பிரக்ஸிற்குப் பின்னர், ஜெர்சி தீவை மையப்படுத்திய கடற்பரப்பில் பிரான்ஸ் மீன்பிடி படகுகளுக்கான மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் பிரித்தானியாவில் மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய மீன்பிடி படகுகளுக்கு பிரான்ஸ் துறைமுகங்கள் மறுக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பிரித்தானியாவின் அண்மைக்கால நகர்வுகள் அதன் முழுமையான நம்பகத்தன்மை மீது கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையிலேயே இரு நாடுகளும் ஒற்றுமைப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்களை பிரான்ஸிற்கு வழங்குவதற்கு பிரதமர் அலுவலகம் எதிர்பார்த்திருப்பதாகவும், பிரான்ஸ் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுமாயின் அவ்வாறான நிலையில் தாமும் செயற்படத் தயங்கப் போதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ரோமில் ஜி 20 மாநாட்டின் முடிவில் பிரித்தானிய பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு ஆரம்பமானது

உலகளாவிய ரீதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்கொட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் ஆரம்பமாகியுள்ளது. சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

2030 ஆம் ஆண்டிற்குள் காபன் வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது மற்றும் பூமியின் நிலைபேறுகைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடவுள்ளனர்.

மனிதர்களால் ஏற்படும் சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியிடப்படும் காபன் காரணமாக உலகம் வெப்பமடைந்து வருவதால், காலநிலை பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாநாடானது, “உலகின் உண்மையின் தருணம்” என்று பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இந்த தருணத்தை நாம் கைப்பற்றுகிறோமா அல்லது அதை நழுவ விடுகிறோமா என்பதை அனைவரும் தமக்கு தாமே கேள்வியாக கேட்க வேண்டும் என மாநாட்டிற்கு முன்னர் பொறிஸ் ஜோன்சன் வலியுறுத்தியிருந்தார்.

உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, மாநாட்டின் முதல் நாளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் தற்போதுள்ள வெப்பநிலையை ஒப்பீடு செய்து, காலநிலை தொடர்பான விஞ்ஞானிகள் உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தின் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் காட்டுத் தீ உட்பட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த தசாப்தம் மிகவும் வெப்பமானதாக இருந்ததுடன், அதனை சமாளிக்க உடனடியான கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கங்கள் இணக்கியிருந்த நிலையில், ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது.

Posted in Uncategorized

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பங்களிலிருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது.

இதற்கமைய யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திர சிகிச்சையில் பேராசிரியராகவும்,

மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும்,

மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறைத்தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி  கே. முகுந்தன், மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்குப்பேரவை ஒப்புதலளித்துள்ளது.

இவர்களுடன், கலைப் பீடத்தில் இருந்து, பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஷ்டவிரிவுரையாளருமான கலாநிதி கே. சுதாகர், தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி(செல்வி) எஸ்.சிவசுப்ரமணியம், பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதிஎஸ்.விஜயகுமார் ஆகியோரை முறையே  புவியியல், தமிழ், பொருளியல் துறைகளில்பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கும் பேரவை ஒப்புதலளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரேதடவையில் அதிக எண்ணிக்கையான  பேராசிரியர் பதவியுயர்வுகள் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை 1 மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்கான விழா பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும் என்றும் அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியமைச்சர் பதவியில் தொடர முடியாது : நீதி அமைச்சர் அலி சப்ரி

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால் நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்து செல்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

இந்த நியமனமானது அனைத்து இனங்களுக்கும் நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால், நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பல கட்சித் தலைவர்கள், ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரியப்படுத்தியுள்ளனர்.