எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை தேவை?

பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகள் மற்றும் உணவகங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆலோசிக்க கொவிட் -19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 தடுப்புச் சட்ட விதிகளின்படி தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் குழு இன்று கூடிய இது தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், கிராமப் புறங்களில் தடுப்பூசி செயல்முறையை நிறைவு செய்ய நடமாடும் தடுப்பூசி வாகனத்தை
பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செயல்திறன் மற்றும் தடுப்பூசி செயல்முறை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்

பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்ய வரமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரத்தடி என்னும் தமிழர் பகுதிக்குள் தொல்பொருள் செயலணியினால் எல்லைக்கற்கல் நடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சியினர் அப்பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்குசென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தன் , தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி வடகிழக்கு தலைவர் கி.சேயோன், ஏறாவூர்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் இணைந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் செயலணியின் எல்லைக்கற்களை நடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,

தமிழர்களின் பல இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததும் நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்டதாகவும் இராணுவத்தினரையும் பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கியதாக ஒரு செயலணியை அமைத்து தொல்லியல் அடையாளங்களை கண்டுபிடித்து அதனை பௌத்த மக்களுக்கு உரியதென அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

அதன் பிரகாரம் தொல்லியல் துறையினர் வடகிழக்கில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் தங்களது பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, வேரம் என்னும் பகுதியில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்து இது தங்களின் பகுதி இங்கு தொல்பொருள் அடையாளங்கள் இருக்கின்றது என காட்டுகின்றனர்.

பழங்கால செங்கல் இருந்த இடமெல்லாம் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். இலங்கையில் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாடு பூர்வீக தமிழர்களின் வாழ்விடமாகும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்தார்கள். பழங்காலத்தில் பௌத்தர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழர்களுக்கு ஒருவிதமாகவும் செங்கல் உற்பத்திசெய்யப்படவில்லை.

அக்காலத்தில் அனைவருக்கும் பொதுவானதாகவே செங்கற்கல் இருந்தன. ஆனால் தற்போது அந்த செங்கற்களை மையமாககொண்டு பௌத்தர்களின் வாழ்விடங்கள் என்று கூறுகின்றனர். இலங்கையின் முதலாவது மன்னனும் தமிழன்தான். இறுதி மன்னனும் தமிழனாகவே இருந்துள்ளான். தமிழர்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்துள்ளார்கள். அவ்வாறானவை தமிழர்களின் தொல்பொருள் இடங்களாக இருந்தால் அதனை தமிழர்களுடன் கலந்துரையாடி அவற்றினை பாதுப்பதில் எந்த தடையும் இல்லை.

ஆனால் எங்கு பழங்கால செங்கற்கள், பழங்கால கல்தூண்கள் காணப்படுகின்றதோ அவற்றினையெல்லாம் பௌத்தர்களின், சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பொலநறுவையில் 18 இந்து ஆலயங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் உள்ளன. அவ்வாறானால் ஏனைய பகுதிகளில் பெருமளவான சைவ ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும். இன்றும் பல ஆலயங்கள் அழிவுகளுடன் அங்கு இருக்கின்றன. அவற்றினை வைத்துக்கொண்டு இன்று நாங்கள் பொலநறுவைக்கு சென்று தமிழர்கள் உரிமைகொண்டாட முடியுமா?.

இன்று அநுராதபுரத்தில் உள்ள இசுறுமுனிய விகாரை அதுவொரு சைவசிவன் ஆலயம். இன்று அவர்கள் அதனை விகாரையாக மாற்றியுள்ளனர். இன்று தென்பகுதியில் உள்ள மிகவும் பழமையான பல சைவ ஆலயங்கள் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழர்கள் இவற்றினையெல்லாம் கேட்டுச்செல்வதுமில்லை, எங்களது இடமென்று சண்டை பிடிக்கவுமில்லை. எங்களது பகுதியென்று தொல்பொருள் பிரகடனப்படுத்துங்கள் என்று கூறவுமில்லை. இவ்வாறு இருக்கும் போது ஏன் வடகிழக்கு தமிழர் பூர்வீக பகுதியில் மட்டும் ஏன் அரசாங்கம் இவ்வாறான அட்டூழியங்களை செய்ய வருகின்றது. இதற்கு துணையாக இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர்.

பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்யவரமாட்டார்கள்.

இன்று சிங்கள மயப்படுத்தவேண்டும், வடகிழக்கில் விகாரைகளை பரவலாக அமைக்க வேண்டும். தமிழர்களின் பூர்வீகம் என்று நிரூபிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரகசியமாகவரும் அமைச்சர்கள் இங்கு சிங்களவர்களுக்கு இரகசியமான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கு எமது அரசியல்வாதிகளும் துணை நிற்கின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான நிலைநீடிக்குமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிடும். அவ்வாறான நிலையேற்பட்டால் எமது சந்ததிக்கு வாழ்வதற்கு இடமில்லாத நிலையே ஏற்படும்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் -ரெலோவின் தலைவர் செல்வம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்வரும் வாரம் முடிவெடுக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

“இன்று ஆயர்கள், கிரிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பல விடயங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக இந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கூடுதலாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் நாம் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நாட்டிலே நடக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி அடுத்த கூட்டத்திலே என்னனென்ன முடிவெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். என்றார்.

Posted in Uncategorized

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் கோட்டாபயவைக் கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலையாளி ராஜபக்சேவை கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி.

முன்னதாக ஸ்கொட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பெரிய தாள் பத்திரிகையில் ஒன்றான , ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் தொடர்பாக வரும் 31ம் திகதி ஸ்கொட்லாந்து தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறீலங்கா அரசதலைவர் கோட்டாபயவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபரின் வருகையைக் கண்டித்து ‘WANTED FOR GENOCIDE PRESIDENT OF SRI LANKA’ எனக்குறிப்பிட்டு கோட்டாபயவின் படம் ஒளிரவிடப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்தது சீனா

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய, இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறும் அனைத்து சீன முதலீட்டாளர்களுக்கும் அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்துமாறு சீனாவின் சிந்தாவோ சீவிங் பயோடெக் நிறுவனம் மக்கள் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைக்கு அமைய மக்கள் வங்கி செயற்படாது கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சீன நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு உர மாதிரிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் காணப்பட்ட காரணத்தினால் அந்த உரத்தை கொள்வனவு செய்யாதிருப்பதற்கு இலங்கை தற்போது தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் உர நிறுவனங்கள் இரண்டு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த சீன நிறுவனத்திற்கான கடன் சான்று பத்திரத்திற்குரிய நிதியை செலுத்துவதைத் தடுத்து தற்போது இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, இளைஞர் ஆய்வு வெளியீடு

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் செயற்திட்டத்தில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுப் பணயத்தில் இளையோர் பங்குபற்றுதலின் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பிலான ஊடக சந்திப்பு திருகோணமலை மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இளைஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ,போதைப்பொருள் பாவனையும் இளையோர் சமுதாயமும் , தமிழ் மக்களும் மொழி உரிமையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவைப்பாடு அதன் பிரயோக நிலையும் என்ற தலைப்புக்களிலான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டது.

மூதூர்- மல்லிகைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை மாதிரியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்கள்

2009 யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் வடக்கு கிழக்கில் அதிகளவானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்ற போதிலும் கூட எந்த விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்க வில்லை. இவ்வாறு ஆண்டுகள் கடந்து செல்கின்றதே தவிர மக்களுக்கு எவ்விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

நீதிக்கான பரிந்துரைகள்

1.சகலவிதமான நியாமற்ற கைதுகளும் சித்திரவதைக்கு உட்படுத்தலையும் கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்த உயிர் இழப்புக்களுக்காவும் விசாரனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நடைபெறும் விசாரணைகள், கொழும்பு மேல் நீதிமன்ற விசாரனைகளில் இருந்து விடுபட்டு மாவட்ட நீதிமன்ற விசாரனைகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

3.தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
நினைவு கூறுதலுக்கான பரிந்துரைகள்

4.காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிடம் மறைந்து இருக்க கூடிய ஆளுமை தன்னம்பிக்கை, துணிவு, மனவுறுதி என்பவற்றை வெளிக்கொணர்வதன் மூலமாக பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், என்பவற்றை நடாத்தி, சமூகத்தில் அவர்களையும் எழுச்சி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு , அரச சார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர்களின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், இலங்கையின் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடாதது அசாதாரணமானது- கெரெத் தோமஸ்

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ், இலங்கையின் வெளியுறவு அமைச்சரிடம் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடாதது அசாதாரணமானது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு வெயலாளர் லிஸ் ட்ரூஸ் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பாக லிஸ் ட்ரூஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் மற்றும் தண்டனையின்மைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது” பற்றி கலந்துரையாடப்பட்டவை குறித்து குறிப்பிடப்படவில்லை என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் வலுவான தொடர்புடைய பிரிட்டன் வாழ் மக்கள் வெளியுறவு செயலாளரிடம் இருந்து இதனைவிட சிறந்ததை எதிர்பார்ப்பதாக கெரெத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

லண்டன் வருகின்ற கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்- வைகோ அறிக்கை

லண்டன் செல்லும் கோட்டாபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோட்டாபய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன், இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவணச் சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது.

ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்றுவரையிலும், இனப்படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும், உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலும் அத்தகைய நீதி விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இது தமிழ் இனத்திற்கு எதிரான அநீதி ஆகும்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் தவிர, பல்லாயிரக்கணக்கில் காணாமல் போன ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலை என்ன? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

சுமார் 8 இலட்சம் தமிழர்கள், இலங்கையில் இருந்து வெளியேறி, உலகின் பல நாடுகளில் அடைக்கலம் பெற்று இருக்கின்றார்கள். அவர்களுள் பல்லாயிரக்கணக்கானவர்கள், இலங்கைக்கு வந்து போவதற்கும் இலங்கை அரசு தடை விதித்து இருக்கின்றது. தவிர, ஆட் கடத்தல், சட்டத்திற்கு எதிராக தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக நாடு கடத்தல் போன்ற குற்றங்களையும், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, தொடர்ந்து செய்து வருகின்றது. இவை எல்லாம், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றம்.

மியான்மர் நாட்டில், ரோகிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த வழக்கை, உலக நீதிமன்றம் (International Court of Criminal Justice) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது.

அதுபோல, இலங்கையில் பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பாக, Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட அமைப்பு, ரோமச் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் (Article 7 of the Ro Roman Statute) பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரின் கவனத்திற்கு, பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு (COP26) நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோட்டாபய இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

அக்கொடியவனின் வருகையை எதிர்த்துக் களம் காண, புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.

இனக்கொலை செய்த பல நாடுகளின் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, 3500 யூதர்கள் படுகொலையில் தொடர்பு உடைய, 100 வயதான நாஜி அதிகாரி மீது, ஜெர்மனி நாட்டின் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை தொடங்கி இருக்கின்றது.

அதுபோல, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோட்டாபய இராஜபக்சேவைக் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை பிரித்தானிய அரசின் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது. இந்தத் கருத்தை வலியுறுத்தி, ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்துள்ளேன்.

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபாயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மிக மோசமான இனவாதியின் தலைமையில் ஒரு செயலணி

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாச்சாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது. உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது சில மாநிலங்களில் இல்லை.

இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒவ்வொரு சட்டங்கள் காணப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல. நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்களே அவை. அது இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலை தான் ஜனாதிபதியினால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்ட பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக் கொள்ளக் கூடியவர். முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர். நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறை தண்டனை வழங்கி இருந்தது.அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.

இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்ற பொழுது கேலியாகவும் சிரிப்புக்கிடமாகவே காணப்படுகின்றது. இந்த நாடு எத்தனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது.

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் மாகாண சபைகளை இல்லாமல் செய்கின்ற, மாகாண சபைகளுக்கு சட்டமியற்றும் உரிமையை இல்லாமல் செய்கின்ற அடிப்படையில் இவ்வாறான ஒரு புதிய முயற்சியை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு வந்தபொழுது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதே எனது கடமை என்றார். சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் என்பது வேறு தமிழ் முஸ்லிம் இனங்களை, அவர்களது கலாச்சாரங்களை, சட்டதிட்டங்களை, நடைமுறைகளை இல்லாமல் செய்வதென்பது வேறு.

அரசாங்கம் இப்பொழுது எடுக்கக்கூடிய முயற்சி என்பது தேசிய இனங்களான வடகிழக்கு தமிழர்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் மலையகத் தமிழர்களாக இருக்கலாம் அவர்களுக்கான பண்பாடு கலாசாரம் என்பதை இல்லாமல் செய்து இது சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றது.

இவ்வாறான செயலணியில் தமிழர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் சொல்லுக்கு தலையாட்டுபவர்களே? இதிலே முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும்கூட முஸ்லிம்களுக்கு இதனால் உபகாரங்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்கு தலையாட்ட கூடிய சிலரை நியமித்து எதனையும் சாதிக்க போவது கிடையாது.

இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது வெறுமனே தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்களத் தரப்பில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி கூட செயற்படவேண்டும். ஏனைய இனங்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மறுதலித்து ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக தான் இந்த செயலணி உருவாக்கம் இருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’ – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, எவருக்குமே அறவே புரியாத, எந்தவிதமான தெளிவுமற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விவகாரம் பற்றி பல்லின சமூகத்தவர் வாழும் இலங்கை நாட்டில் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் தாறுமாறான கருத்துக்கள் பரவலாக நிலவிவருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா?  முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருபவரும், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாகத் தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வரும் ஞானசார தேரரை தலைவராக நியமித்திருப்பது நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மேலும் மோசமான நிலைமைக்கே  இட்டுச்செல்லும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இச்செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized